search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கிரிக்கெட்: 2-வது டெஸ்ட் இன்று தொடக்கம்
    X

    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கிரிக்கெட்: 2-வது டெஸ்ட் இன்று தொடக்கம்

    இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிங்ஸ்டனில் இன்று தொடங்குகிறது.
    கிங்ஸ்டன் :

    விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஆன்டிகுவாவில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 92 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை தோற்கடித்து தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கிங்ஸ்டனில் உள்ள சபினா பார்க் ஸ்டேடியத்தில் இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி இந்திய வீரர்கள் நேற்று தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டனர்.

    முதலாவது டெஸ்டில் இவ்வளவு எளிதில் வெற்றி கிடைக்கும் என்று இந்திய வீரர்கள் எதிர்பார்த்து இருக்கமாட்டார்கள். பேட்டிங்கில் கேப்டன் விராட் கோலி (200 ரன்), அஸ்வின் (113 ரன்), ஷிகர் தவான் (84 ரன்) ஆகியோர் அசத்தினர். பந்து வீச்சில் முதல் இன்னிங்சில் உமேஷ் யாதவ், முகமது ஷமியும், 2-வது இன்னிங்சில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினும் (7 விக்கெட்) வெஸ்ட் இண்டீசை சீர்குலைத்தனர். 2-வது டெஸ்டிலும் வெற்றியை தொடரும் உத்வேகத்துடன் இந்திய வீரர்கள் வியூகங்களை வகுத்துள்ளனர்.

    வெஸ்ட் இண்டீஸ் அணியினர் தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் உள்ளனர். ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்டில் மணிக்கு அதிகபட்சமாக 143 கிலோமீட்டர் வேகம் வரை பந்து வீசிய 19 வயதான அல்ஜாரி ஜோசப் அறிமுக வீரராக களம் காணுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த ஆடுகளத்தில் புற்கள் கணிசமான அளவில் உள்ளன. பவுன்சுடன் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக ஆடுகளம் இருக்கும் என்று ஆடுகள பராமரிப்பாளர் மைக்கேல் ஹைல்டோன் கூறியுள்ளார். அதுவும் தொடக்க நாளில் முதல் முதல் இரண்டு மணி நேரம் ஆடுகளத்தில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும். இதனால் வேகப்பந்துவீச்சை எதிர்கொள்வது சற்று கடினமாக இருக்ககூடும் என்றும் அவர் குறிப்பிட்டார். இது வெஸ்ட் இண்டீசுக்கு சற்று சாதகமான அம்சமாகும்.

    இந்த மைதானத்தில் 1998-ம் ஆண்டுக்கு பிறகு நடந்த 15 டெஸ்டுகளிலும் முடிவு கிடைத்திருக்கிறது. ஒன்று கூட ‘டிரா’ ஆனதில்லை. இந்திய அணி இங்கு இதுவரை 11 டெஸ்டுகளில் விளையாடில் 2-ல் வெற்றியும், 6-ல் தோல்வியும், 3-ல் டிராவும் கண்டுள்ளது. இவ்விரு வெற்றிகளும் கடைசியாக இங்கு விளையாடிய 2006 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் கிடைத்தவையாகும்.

    போட்டி குறித்து இந்திய வீரர் புஜாரா கூறும் போது, ‘4 டெஸ்டுகளிலும் வெஸ்ட் இண்டீசை வீழ்த்த வேண்டும் என்பதே எங்களது ஒரே இலக்கு. ஆனால் ஒவ்வொரு போட்டியாக கவனம் செலுத்துவோம். எனது பேட்டிங் குறித்து கவலையில்லை. ஒட்டுமொத்தமாக பார்த்தால் எனது பேட்டிங் நன்றாகவே இருக்கிறது’ என்றார்.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    இந்தியா: ஷிகர் தவான், முரளிவிஜய் அல்லது லோகேஷ் ராகுல், புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ரஹானே, அஸ்வின், விருத்திமான் சஹா, அமித் மிஸ்ரா, முகமது ஷமி, இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ்.

    வெஸ்ட் இண்டீஸ்: கிரேக் பிராத்வெய்ட், சந்திரிகா அல்லது லியோன் ஜான்சன், டேரன் பிராவோ, சாமுவேல்ஸ், பிளாக்வுட், ரோஸ்டன் சேஸ் அல்லது அல்ஜாரி ஜோசப், ஷேன் டவ்ரிச், ஜாசன் ஹோல்டர் (கேப்டன்), கார்லஸ் பிராத்வெய்ட், கேப்ரியல், தேவேந்திர பிஷூ.

    இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை டென்2, டென்3 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
    Next Story
    ×