search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    589 ரன்களில் டிக்ளேர் செய்தது இங்கிலாந்து: விக்கெட் சரிவால் பாலோ ஆனை தவிர்க்க பாகிஸ்தான் போராட்டம்
    X

    589 ரன்களில் டிக்ளேர் செய்தது இங்கிலாந்து: விக்கெட் சரிவால் பாலோ ஆனை தவிர்க்க பாகிஸ்தான் போராட்டம்

    ஓல்டு டிராஃப்போர்டில் நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது போட்டியில், வோக்ஸ் வேகத்தில் விக்கெட்டுக்கள் வீழ்ந்ததால் பாகிஸ்தான் அணி பாலோ ஆனை தவிர்க்க போராடி வருகிறது.
    மான்செஸ்டர்:

    இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஓல்டு டிராஃப்போர்டில் நேற்று முன் தினம் தொடங்கியது.

    டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 314 ரன்கள் குவித்தது. கேப்டன் அலைஸ்டர் குக் சதம் அடித்து 105 ரன்னில் அவுட் ஆனார். ஜோ ரூட்டும் சதம் அடித்தார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் ரூட் 141 ரன்னுடனும், கிறிஸ் வோக்ஸ் 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி 152.2 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 589 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. ஜோ ரூட் இரட்டை சதம் அடித்து அசத்தினார். 254 ரன்கள் எடுத்து அவர் ஆட்டமிழந்தார். வோக்ஸ்(58), பேயர்ஸ்டோவ்(58) ஆகியோரும் அரைசதம் அடித்து அணியின் ஸ்கோர் உயர உதவினர்.

    பாகிஸ்தான் சார்பில் வஹாப் ரியாஸ் 3 விக்கெட்டும், அமிர் மற்றும் ரஹத் அலி தலா இரண்டு விக்கெட்டும், யாசீர் ஷா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சை விளையாடியது. அணியின் ஸ்கோர் 27-ஆக இருக்கும் போதே தனது முதல் விக்கெட்டை பாகிஸ்தான் இழந்தது. அதன் பிறகு அடுத்தடுத்து விக்கெட்டுக்கள் விழுந்த வண்ணம் இருந்தது.

    2-ம் நாள் ஆட்ட இறுதியில் பாகிஸ்தான் அணி 24 ஓவர்களில் 54 ரன்களுக்குள் 4 விக்கெட்டுக்களை இழந்தது. ஹபிஸ்(18), யுனிஸ் கான்(1), அசார் அலி(1), ரகட் அலி(4) ரன்களில் ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து அணியின் வோக்ஸ் சிறப்பாக பந்து வீசி பாகிஸ்தான் அணியின் மூன்று விக்கெட்டுக்களை சாய்த்தார்.

    முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணியை விட பாகிஸ்தான் 532 ரன்கள் பின் தங்கியுள்ளது. இன்னும் 6 விக்கெட்டுக்கள் அந்த அணியின் வசம் உள்ளது.
    Next Story
    ×