search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேப்டன் பதவியில் கங்குலியை போல் அதிர்ஷ்டம் இல்லாமல் ஏமாற்றம் அடைந்த மெஸ்சி
    X

    கேப்டன் பதவியில் கங்குலியை போல் அதிர்ஷ்டம் இல்லாமல் ஏமாற்றம் அடைந்த மெஸ்சி

    ஐந்தாண்டு கேப்டன் பதவியில் மூன்று முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறி கோப்பையை வெல்ல முடியாமல் ஏமாற்றம் அடைந்தார் மெஸ்சி.
    இந்திய கிரிக்கெட் அணியில் கடந்த 1992-ம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானவர் சவுரவ் கங்குலி. கொல்கத்தாவின் ‘தாதா’ என்று செல்லமாக அழைக்கப்பட்ட இவர், 2008-ம் ஆண்டு வரை சுமார் 16 வருடங்கள் இந்திய அணியில் இடம்பிடித்திருந்தார்.

    இதில் 2000-ம் ஆண்டு முதல் 2006-ம் அண்டு வரை சுமார் 6 ஆண்டுகள் கேப்டனாக இருந்தார். இந்த காலக்கட்டத்தில் இந்தியா கிரிக்கெட்டில் அமோக வெற்றி பெற்றது. இந்திய கிரிக்கெட் அணியை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றார்.

    யுவராஜ் சிங், சேவாக், கையூப், ஹர்பஜன் சிங் போன்றோரை அடையாளம்கண்டு இந்திய அணிக்கு கொண்டு வந்த பெருமை இவரைச் சாரும். இவரது தலைமையில் இந்தியா 49 போட்டிகளில் 21 வெற்றி, 13 தோல்வி, 15 டிரா செய்து அசத்தியது. அதேபோல் 146 ஒருநாள் போட்டிகளுக்கு கேப்டனாக இருந்த கங்குலி (76 வெற்றி, 65 வெற்றி, 5 முடிவில்லை) அதிக அளவு வெற்றிகளை தேடித்தந்துள்ளார்.

    ஆனால், முக்கியமான தொடர்களில் சாம்பியன் பட்டம் வென்றது கிடையாது. குறிப்பாக மூன்று நாடுகளுக்கு மேல் பங்குபெறும் கிரிக்கெட் தொடரில் இந்தியா இறுதிப் போட்டி வரை சென்றிருக்கிறது. ஆனால் கோப்பையை வென்றது கிடையாது. 2003-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 20 ஆண்டுகள் கழித்து இந்தியா கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்த்த நிலையில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்து கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது. இதனால் வெற்றிகள் அதிகம் குவித்தாலும் சாம்பயின் பட்டத்தை வெல்லும் வாய்பில்லா அதிர்ஷ்டம் இல்லாத கேப்டன் என்ற சரித்திரம் ஒன்று கங்குலிக்கு உண்டு.

    அதேபோல்தான் தற்போது மெஸ்ஸிக்கும் ஏற்பட்டுள்ளது. கடந்த 2007-ம் ஆண்டு நடைபெற்ற கோபா அமெரிக்கா தொடரில் மெஸ்சி இடம்பெற்றிருந்த அர்ஜென்டினா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஆனால் இறுதிப்போட்டியில் தோல்வியடைந்தது. அதன்பின் 2014-ம் ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டி இறுதிப் போட்டியில் 0-1 என ஜெர்மனியிடம் கோப்பையை இழந்தது. இருந்தாலும் அந்த தொடரில் சிறப்பாக விளையாடிய மெஸ்ஸி தொடர் நாயகன் விருது பெற்றார். 90 நிமிடங்களில் இரு நாட்டு அணிகளும் கோல் அடிக்கவில்லை. கூடுதல் நேரத்தில் ஆட்டத்தின் 116-வது நிமிடத்திற்கு மேல்தான் ஜெர்மனி வெற்றி பெற்றது.

    கடந்த ஆண்டு சிலியில் கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் நடைபெற்றது. இந்த தொடரிலும் அர்ஜென்டினா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. சிலிக்கு எதிரான விளையாடியதில் கூடுதல் நேரம் சேர்த்து 120 நிமிடங்கள் விளையாடியும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் பெனால்டி ஷூட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் சிலி வெற்றி பெற்று முதன்முறையாக கோபா அமெரிக்காவை வென்றது.

    கோபா அமெரிக்கா தொடர் தொடங்கிய இந்த வருடத்துடன் சரியாக 100 வருடங்கள் ஆவதால் சிறப்பு கோபா அமெரிக்கா தொடர் நடத்தப்பட்டது. இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் கடந்த முறை தோல்வியடைந்தது மாதிரியே இன்றும் அர்ஜென்டினா தோல்வியை தழுவியது.

    இதனால் நான்கு கோப்பைகளை அர்ஜென்டினாவிற்கு வாங்கிக்கொடுக்க முடியாத விரக்தியில் மெஸ்ஸி ஓய்வு பெற்றுள்ளார்.

    கங்குலியை போல் மெஸ்ஸிக்கும் இறுதிப்போட்டி வரை சென்று கோப்பையை வாங்க முடியாத துரதிர்ஷ்டம் துரத்திக்கொண்டே வந்துள்ளது.
    Next Story
    ×