search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய அணியின் இயக்குனராக ரவிசாஸ்திரியை நீட்டிக்க வேண்டும்: வாசிம் அக்ரம்
    X

    இந்திய அணியின் இயக்குனராக ரவிசாஸ்திரியை நீட்டிக்க வேண்டும்: வாசிம் அக்ரம்

    இந்திய அணியின் இயக்குனர் ரவி சாஸ்திரி விருப்பப்பட்டால், அவரை அந்த பதவியில் தொடரச் செய்ய வேண்டும் என்று கருதுவதாக வாசிம் அக்ரம் கூறினார்.
    கொல்கத்தா :

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் பத்திரிகை ஒன்றில் எழுதியுள்ள கட்டுரை வருமாறு:-

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்திய துணை கண்டத்தை சேர்ந்த எந்த அணிகளாலும் இறுதிப்போட்டிக்கு வர இயலவில்லை. சொந்த மண்ணில் இந்திய அணி கோப்பையை வெல்வதற்கு அதிகமான வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்ட நிலையில், தோல்வியை தழுவியது டோனி தலைமையிலான இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாகும்.

    இந்திய அணியின் இயக்குனர் ரவிசாஸ்திரியின் ஒப்பந்த காலம் முடிவுக்கு வந்து விட்டதாகவும், புதிய பயிற்சியாளரை கொண்டு வருவதில் சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் ஆலோசித்து வருவதாகவும் கேள்விப்பட்டேன். ரவி சாஸ்திரி விருப்பப்பட்டால், அவரை அந்த பதவியில் தொடரச் செய்ய வேண்டும் என்று கருதுகிறேன்.

    இதற்கு முன்பு இந்திய அணிக்கு வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் பயிற்சி அளித்திருக்கிறார்கள். அவர்களுக்கு உள்நாட்டைச் சேர்ந்த தாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை ரவிசாஸ்திரி மற்றும் அவரது குழுவினர் நிரூபித்து இருக்கிறார்கள். டங்கன் பிளட்செர் (ஜிம்பாப்வே நாட்டவர்) பயிற்சியின் கீழ் இந்திய அணி தொடர்ந்து 8 டெஸ்டுகளில் தோல்வி அடைந்தது.

    ரவி சாஸ்திரி பொறுப்பேற்றதும் அணியின் நம்பிக்கையை மேம்பட செய்து, ஊக்கப்படுத்தினார். ஆஸ்திரேலியாவில் நடந்த 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை முழுமையாக தோற்கடித்து ‘ஒயிட்வாஷ்’ செய்து அசத்தியது. எல்லாவற்றுக்கும் மேலாக இவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி மீண்டும் போராட்டம் குணம் நிறைந்த அணியாக மாறியதை பார்க்க முடிகிறது. இப்போது எதிரணி வீரர்களை நேருக்கு நேர் எதிர்கொள்வதில் அஞ்சுவதில்லை.

    ரவிசாஸ்திரி வெறும் ஊக்கம் அளிப்பவர் மட்டும் அல்ல. கிரிக்கெட் நுணுக்கங்களையும் நன்கு அறிந்த அனுபவசாலி. இந்திய கிரிக்கெட் வாரியம் என்ன நினைக்கிறது என்பது எனக்கு தெரியாது. ஆனால் இந்த பொறுப்பில் இருந்து அவர் நீக்கப்பட்டால், ஆச்சரியமடைவேன்.

    இவ்வாறு அக்ரம் எழுதியுள்ளார்.
    Next Story
    ×