search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரளா: செல்போனில் டாக்டரின் ஆலோசனைபடி ஊழியர்கள் சிகிச்சை அளித்த 1½ வயது சிறுவன் பலி
    X

    கேரளா: செல்போனில் டாக்டரின் ஆலோசனைபடி ஊழியர்கள் சிகிச்சை அளித்த 1½ வயது சிறுவன் பலி

    கேரளாவில் வயிற்றுவலிக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 1½ வயது சிறுவனுக்கு செல்போனில் டாக்டர் கூறிய ஆலோசனைபடி ஊழியர்கள் சிகிச்சை அளித்ததால் சிறுவன் பரிதாபமாக இறந்தான்.
    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் பாட்டிகுளத்தை சேர்ந்தவர் சுனில்குமார். இவரது 1½ வயது மகன் அபிதேவ். சம்பவத்தன்று இரவு சிறுவன் வயிற்றுவலியால் அலறித்துடித்தான்.

    அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகனை சித்தூர் விளையோடியில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். நள்ளிரவில் ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் இல்லை. ஊழியர்கள் சிறுவனை மீட்டு படுக்கையில் படுக்க வைத்தனர். பின்னர் செல்போன் மூலம் டாக்டரை தொடர்பு கொண்டு ஆலோசனை கேட்டனர்.

    டாக்டரின் ஆலோசனையின்படி ஊழியர்கள் சிறுவனுக்கு சிகிச்சை அளித்தனர். 1 மணிநேரம் சிகிச்சை அளித்தும் சிறுவனின் உடல் நிலைமை மேலும் மோசமானது.

    மகனின் நிலைமையை கண்ட பெற்றோர் வேறு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்செல்ல முயன்றனர். ஆனால் ஊழியர்கள் சிறுவனை அழைத்துச்செல்ல அனுமதிக்கவில்லை. இந்நிலையில் நேற்று காலை சிறுவன் அபிதேவ் பரிதாபமாக இறந்தான்.

    மகனின் இறப்பு குறித்து அறிந்த சுனில்குமார் அதிர்ச்சியடைந்தார். செல்போன் மூலம் டாக்டரின் ஆலோசனையின் பேரில் ஊழியர்கள் சிசிச்சை அளித்ததால் தான் தனது மகன் இறந்தார் என்று தனது ஊர்ப்பொதுமக்களிடம் கூறி கதறி அழுதார்.

    அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மற்றும் ஊர்ப்பொதுமக்கள் ஆஸ்த்திரிக்கு வந்து சிறுவன் இறந்தது குறித்து கேட்டனர். இதனால் ஆஸ்பத்திரி ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஆஸ்பத்திரி கண்ணாடி மற்றும் கட்டிடங்களை அடித்து நொறுக்கினர். பின்னர் அங்கு நிறுத்தப்பட்ட 2 கார் மற்றும் ஒரு பஸ்சை அடித்து நொறுக்கினர்.

    இது குறித்து தகவல் கிடைத்ததும் சித்தூர், கொழிஞ்சாம்பாறை, மீனாட்சிபுரம் ஆகிய போலீஸ் நிலையங்களில் இருந்து போலீசார் அங்கு வந்து பொதுமக்களை சமாதானம் செய்தனர். பின்னர் இது குறித்து மீனாட்சிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×