search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சட்டசபை உரையில் மத்திய அரசு மீதான விமர்சனங்களை வாசிக்காமல் தவிர்த்த கேரள கவர்னர்
    X

    சட்டசபை உரையில் மத்திய அரசு மீதான விமர்சனங்களை வாசிக்காமல் தவிர்த்த கேரள கவர்னர்

    கேரள சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் உரையின்போது கவர்னர் சதாசிவம் மத்திய அரசு மீதான விமர்சனங்களை வாசிக்காமல் தவிர்த்து விட்டார். #KeralaAssembly #KeralaGovernor #Sathasivam
    திருவனந்தபுரம்:

    கேரள சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் நேற்று தொடங்கியது. பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணி அரசு தயாரித்த உரையை கவர்னர் சதாசிவம் படித்தார்.

    கவர்னர் உரை நிகழ்த்த தொடங்கியதும் அவரது உரை அச்சிட்ட பிரதிகள், எம்.எல்.ஏ.க்களுக்கு வழங்கப்பட்டது. கவர்னர் பேசுவதை அவரது உரை அச்சிட்ட பிரதிகளை கையில் வைத்தபடி எம்.எல்.ஏ.க்கள் கேட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது உரையில் இடம் பெற்ற பல வரிகளை கவர்னர் சதாசிவம் படிக்கவில்லை. இது எம்.எல்.ஏ.க்களுக்கு வியப்பாக இருந்தது. அந்த வரிகள் அனைத்தும் மத்திய அரசை, மாநில அரசு விமர்சிக்கும் வரிகளாகும்.

    குறிப்பாக, “மத்திய அரசு கூட்டாட்சி தத்துவம் என்ற சிறந்த பாரம்பரியத்தை மீறும் வகையில் செயல்படுகிறது. மாநில அரசை மீறி மாவட்ட மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தில் தலையிடுகிறது” என்ற வரிகளை கவர்னர் சதாசிவம் படிக்கவில்லை.

    இதுபோல சட்டம் ஒழுங்கை காப்பதில் நாட்டிலேயே கேரளா முன்னிலை வகிக்கிறது. சில மதவாத சக்திகள் சதி செய்த போதிலும், கேரளாவில் மத மோதல் நடக்காமல் தடுக்கப்பட்டு வருகிறது என்ற வரிகளையும் படிக்காமல் கவர்னர் தவிர்த்து விட்டார்.

    சமீபத்தில்தான் கேரளாவின் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை பற்றியும், கண்ணூர் மாவட்டத்தில் நடைபெறும் கொலைகள் குறித்தும் கவர்னர் சதாசிவம் ஒரு நிகழ்ச்சியில் கவலை தெரிவித்து பேசி இருந்தார்.

    மாநில அரசு தயாரித்த உரையில் பல பகுதிகளை கவர்னர் சதாசிவம் படிக்காமல் தவிர்த்தது குறித்து நிருபர்கள் கேரள முதல்- மந்திரியின் அலுவலக அதிகாரிகளிடம் கருத்து கேட்டனர்.

    அவர்கள் கூறும்போது, பொதுவாக கவர்னர் உரை குறித்து முதல்வர் அலுவலகம் எந்த கருத்தையும் கூறுவதில்லை. இது தொடர்பாக நாங்கள் கருத்து எதுவும் தெரிவிக்க முடியாது, என்றனர்.

    கவர்னர் சதாசிவம் தமிழகத்தைச் சேர்ந்தவர். சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றவர். மத்தியில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான ஆட்சி அமைந்ததும், சதாசிவத்திற்கு கேரள கவர்னர் பதவி வழங்கப்பட்டது. #KeralaAssembly #KeralaGovernor #Sathasivam
    Next Story
    ×