search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹாதியா திருமணம் பற்றி விசாரணை கூடாது: என்.ஐ.ஏ.வுக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்
    X

    ஹாதியா திருமணம் பற்றி விசாரணை கூடாது: என்.ஐ.ஏ.வுக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்

    ஹாதியா வழக்கி்ல் உள்ள மற்ற அம்சங்களை விசாரிக்க தடையில்லை, அதே வேளையில், அவரது திருமணம் தொடர்பாக எந்த விசாரணையும் கூடாது என தேசிய புலனாய்வு முகமைக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியுள்ளது.
    புதுடெல்லி:

    கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தை அடுத்த வைக்கம் பகுதியை சேர்ந்தவர் அசோகன். ஓய்வுபெற்ற ராணுவ வீரர். இவரது மகள் அகிலா (வயது 24). தமிழ்நாட்டில் உள்ள சேலத்தில் ஒரு கல்லூரியில் படித்து வந்த அகிலா கடந்த ஆண்டு திடீரென மாயமானார். இதுபற்றி அசோகன் பெருந்தல்மன்னா போலீசில் புகார் செய்தார். போலீசாரால் அகிலாவை கண்டுபிடிக்க முடியவில்லை.

    எனவே, அகிலாவின் தந்தை அசோகன் கேரள ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அதில் சேலத்தில் படித்து வந்த தன் மகளை அவருடன் படித்த சிலர் கடத்தி சென்று வேறு மதத்திற்கு மாற்றிவிட்டனர். அவர்களுடன் என் மகள் தங்கியுள்ளார். அவரை மீட்டு என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

    இம்மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி அகிலாவை கண்டு பிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. போலீசார் அகிலாவை தேடிவந்த நிலையில் அகிலா, கோர்ட்டில் ஆஜரானார்.

    அப்போது அவர் நீதிபதி முன்பு சொந்த விருப்பத்தின் பேரிலேயே மதம் மாறியதாகவும், தற்போது அறக்கட்டளை ஒன்றில் தங்கியிருப்பதாகவும் கூறினார். அவரது கருத்தை கோர்ட்டு பதிவு செய்து கொண்டதோடு அகிலாவை அவர் விருப்பப்படி செல்ல அனுமதித்தது.

    இதையடுத்து, அகிலாவின் தந்தை அசோகன் மீண்டும் கேரள ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் தன் மகளை தீவிரவாத இயக்கத்தில் சேர்க்க முயற்சி நடக்கிறது. மதம் மாற்றி திருமணம் செய்தவர்கள் அவரை சிரியாவுக்கு கடத்தி செல்ல முயற்சிப்பதாகவும் கூறியிருந்தார்.

    இந்த மனு மீதான விசாரணை நடந்து கொண்டிருந்தபோது அகிலா மீண்டும் கோர்ட்டில் ஆஜரானார். அப்போது அவர் ஷபின் ஜஹான் என்பவருடன் தனக்கு திருமணம் ஆகிவிட்டதாக கூறினார். திருமணத்தை பதிவு செய்ய அப்பகுதியில் உள்ள பஞ்சாயத்து அலுவலகத்தில் பணம் செலுத்தியதற்கான ரசீதையும் கோர்ட்டில் சமர்ப்பித்தார்.

    ஆனால், இந்த திருமணத்தை ஏற்க கோர்ட்டு மறுத்தது. காணாமல் போனதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணையில் இருக்கும்போது எப்படி திருமணம் செய்யலாம்? என்று அகிலாவுக்கு கோர்ட் கண்டனம் தெரிவித்தது. மேலும், இத்திருமணத்தை பதிவு செய்யக்கூடாது என்றும் திருமணத்தை ரத்து செய்தும் பஞ்சாயத்து அலுவலக செயலாளருக்கும் உத்தரவு பிறப்பித்தது. மேலும், அகிலாவை எர்ணாகுளம் மகளிர் காப்பகத்துக்கு அனுப்பவும் உத்தரவிட்டது.

    இதையடுத்து, டெல்லியில் உள்ள சுப்ரீம் கோர்ட்டில் ஷபின் ஜகான் மேல்முறையீடு செய்தார். அதில், ‘24 வயதாகும் மேஜரான பெண்ணுக்கு யாரை திருமணம் செய்து கொள்ள வேண்டும், எந்த மத நம்பிக்கையைப் பின்பற்ற வேண்டும் என்று முடிவு செய்யும் உரிமை உள்ளது’ என்று அவர் தெரிவித்திருந்தார்.

    இந்த வழக்கில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27-ம் தேதி தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட், ஹாதியா அவரது பெற்றோரின் பிடியில் இருக்க தேவையில்லை என கூறியது. சேலம் கல்லூரியில் அவர் தொடர்ந்து படிக்கவும், கல்லூரியின் முதல்வரை ஹாதியாவின் பாதுகாவலர்களாக நியமித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    இதனையடுத்து, அவர் கல்லூரியில் தற்போது படித்து வருகிறார். இந்நிலையில், ஷபின் ஜகான் பின்னணி குறித்து விசாரித்து வரும் தேசிய பாதுகாப்பு முகமை (என்.ஐ.ஏ) விசாரணையில் முன்னேற்றம் இருப்பதாக இன்று சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்தது. அப்போது, நீதிபதிகள் கான்வில்கர், சந்திரசுத் அமர்வு இவ்வழக்கில் சில அறிவுரைகளை என்.ஐ.ஏ.வுக்கு வழங்கியது.

    “வழக்கில் உள்ள மற்ற விவகாரங்களை நீங்கள் (என்.ஐ.ஏ) விசாரிப்பதிலோ, யாரையும் கைது செய்வதிலும் எங்களுக்கு பிரச்சனை இல்லை. ஆனால், அவரது திருமணம் தொடர்பாக எந்த விசாரணையும் நடத்த கூடாது” என கூறிய நீதிபதிகள் வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் 22-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
    Next Story
    ×