search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலி கார்டு தயாரித்து ஏ.டி.எம்.களில் இருந்து பணம் அபேஸ்
    X

    போலி கார்டு தயாரித்து ஏ.டி.எம்.களில் இருந்து பணம் அபேஸ்

    போலி கார்டு தயாரித்து தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள ஏ.டி.எம்.களில் இருந்து வங்கி வாடிக்கையாளர்களின் பணத்தை எடுத்துச் சென்ற கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
    கோழிக்கோடு:

    கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் வாடிக்கையாளர்கள் சிலரது கணக்கில் இருந்த பணம், கோவையில் உள்ள ஒரு ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

    இதுதொடர்பாக கேரள போலீசார் நடத்திய விசாரணையில், தொழில்நுட்பத்தில் கைதேர்ந்த ஒருவன் தலைமையிலான கும்பல் ஒன்று, ஏ.டி.எம்.மில் இருந்து மோசடியாக பணத்தை எடுத்து இருப்பது தெரியவந்தது.

    இந்த கும்பல் தமிழ்நாடு, கர்நாடகம், மராட்டியம், கோவா ஆகிய மாநிலங்களில் போலி ஏ.டி.எம். கார்டுகளை பயன்படுத்தி பல்வேறு ஏ.டி.எம்.கள் மூலம் வாடிக்கையாளர்கள் பலரது வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்து இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    “இந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் ஏ.டி.எம். எந்திரங்களில் ரகசியமாக ‘ஸ்கிம்மர்’ கருவி, பொத்தான் கேரமா போன்றவற்றை பொருத்தி. அதன் மூலம் பணம் எடுக்கும் வாடிக்கையாளர்களின் ஏ.டி.எம். கார்டுகள் பற்றிய விவரங்களை திருடி உள்ளனர். பின்னர் அதன் அடிப்படையில் போலி ஏ.டி.எம். கார்டுகளை தயாரித்து அவற்றின் மூலம் பணத்தை எடுத்து இருப்பது விசாரணையில் தெரியவந்து உள்ளது” என்று கோழிக்கோடு போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

    மாணவர்கள் உள்ளிட்டோர் அடங்கிய இந்த கும்பலில் உள்ளவர்கள் பணத்தை திருடிச் சென்று கொடுப்பார்கள் என்றும், இதற்காக அவர்களுக்கு கும்பலின் தலைவன் அதிக அளவில் பணம் கொடுத்து உள்ளான் என்றும் அந்த வட்டாரங்கள் கூறின.

    இந்த மோசடி கும்பலை கேரள தனிப்படை போலீசார் தேடி வருகிறார்கள். இது தொடர்பாக கேரளாவிலும் தமிழ்நாடு, கர்நாடகம், மராட்டியம், கோவா ஆகிய மாநிலங்களிலும் அவர்கள் விசாரணை நடத்தி உள்ளனர். #tamilnews
    Next Story
    ×