search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லி: தகுதிநீக்கம் செய்யப்பட்ட ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களுக்கு பா.ஜ.க. தலைவர்கள் ஆதரவு
    X

    டெல்லி: தகுதிநீக்கம் செய்யப்பட்ட ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களுக்கு பா.ஜ.க. தலைவர்கள் ஆதரவு

    டெல்லியில் இரட்டை பதவி விவகாரத்தினால் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ள ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு அதிருப்தி பா.ஜ.க. தலைவர்களான யஷ்வந்த் சின்ஹா மற்றும் சத்ருகன் சின்ஹா ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். #AamAadmiParty #MLAsdisqualification
    புதுடெல்லி:

    டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான ஆட்சியில், முதல் மந்திரியாக அரவிந்த் கெஜ்ரிவால் பதவி வகித்து வருகிறார். ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த 21 எம்.எல்.ஏ.க்கள், ஆதாயம் தரும் கூடுதல் பதவியை வகித்து வருவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர் கட்சிகள் அவர்கள் மீது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. தேர்தல் ஆணையத்திலும் புகார் மனுக்கள் அளிக்கப்பட்டன. இரட்டை ஆதாய புகாரில் சிக்கிய 21 எம்.எல்.ஏ.க்களில் ஜர்னைல் சிங் ராஜினாமா செய்ததால் அவர் மீதான குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. மற்ற 20 பேர் மீதான புகார் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வந்தது.

    இதற்கிடையே, இரட்டை பதவி விவகாரம் தொடர்பாக,  ஆதாயம் தரும் பதவி வகிக்கக் கூடாது என்ற விதியின் கீழ் 20 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யுங்கள் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்து கடிதம் அனுப்பியது.

    தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று, 20 ஆம் ஆத்மி எம் எல் ஏக்களை தகுதி நீக்கம் செய்யும் உத்தரவில்  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று மதியம் கையெழுத்திட்டார். இதையடுத்து 20 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களும் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர்.

    இந்நிலையில், தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு ஆதரவாக பா.ஜ.க. தலைமை மீது அதிருப்தியில் உள்ள யஷ்வந்த் சின்ஹா மற்றும் சத்ருகன் சின்ஹா ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து யஷ்வந்த் சின்ஹா பதிவுசெய்துள்ள டுவிட்டில் கூறியிருப்பதாவது, “20 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செய்த ஜனாதிபதியின் உத்தரவு இயற்கையான நீதிக்கு எதிரானது. உயர்நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருக்கவில்லை. இது மோசமான உத்தரவாகும்”, என கூறியுள்ளார்.

    சத்ருகன் சின்ஹா வெளியிட்டுள்ள டுவிட்டில், “பழிவாங்கும் அரசியல் அல்லது சொந்த நலன்களின் அரசியல்கள் நீண்ட காலம் நீடிக்காது. கவலைப்பட வேண்டாம், மகிழ்ச்சியாக இருங்கள்!. உங்களுக்கு விரைவில் நீதி கிடைக்குமென்று நான் நம்புகிறேன், அதுவே எனது ஆசை. அதற்காக பிரார்த்தனை செய்துகொள்கிறேன். 'ஆம் ஆத்மி' கட்சியினர் மற்றும் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களுக்கு வாழ்த்துக்கள். செல்லும் வழி கடினமாகும் போது, அது தானாக சரியாகிவிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். சத்யமேவ ஜெயதே! ஜெய் ஹிந்த்!”, என குறிப்பிட்டுள்ளார்.

    யஷ்வந்த் சின்ஹா மற்றும் சத்ருகன் சின்ஹா இருவரும் மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு மீது குற்றச்சாட்டுகள் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. #AamAadmiParty #MLAsdisqualification #YashwantSinha #ShatrughanSinha #tamilnews
    Next Story
    ×