search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஷ்மீரில் அத்துமீறிய தாக்குதலில் பலி 11 ஆக உயர்வு - பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை
    X

    காஷ்மீரில் அத்துமீறிய தாக்குதலில் பலி 11 ஆக உயர்வு - பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை

    காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய அத்துமீறிய தாக்குதலில் பலி எண்ணிக்கை 11 ஆனது. இதையொட்டி பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை விடுத்து உள்ளது. #India #Pakistan
    ஜம்மு:

    காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய அத்துமீறிய தாக்குதலில் பலி எண்ணிக்கை 11 ஆனது. இதையொட்டி பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை விடுத்து உள்ளது.

    காஷ்மீரில் எல்லைக்கோடு மற்றும் சர்வதேச எல்லைப்பகுதிகளில் பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்துகிறது. பீரங்கி தாக்குதல்களில் ஈடுபடுகிறது. கையெறி குண்டுகளை வீசுகிறது. இந்த தாக்குதலில் எல்லையோர கிராமங்கள் சிக்கிக்கொள்கின்றன. அப்பாவி பொதுமக்களும் உயிரிழப்பை சந்தித்து வருகின்றனர்.



    நேற்று முன்தினம் இரவு பூஞ்ச் மாவட்டம், மேன்கொட்டே செக்டரில் முன்னோக்கு நிலை ஒன்றில் பணியில் இருந்து ராணுவ வீரர் சி.கே.ராய், பாகிஸ்தான் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலி ஆனார். இவர் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார்.

    இதன்மூலம் கடந்த 4 நாட்களில் எல்லைப்பகுதிகளில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதல்களில் பலி ஆனவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது.

    பாகிஸ்தான் படையினர் எல்லை கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் அமைந்து உள்ள நவுஷெரா, ரஜவுரி, அக்னூர் செக்டர்களில் நேற்றும் தாக்குதல் நடத்தினர். ஆனால் பாகிஸ்தான், இந்தியா அத்துமீறி தாக்குதல் நடத்துவதாக கூறி, இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய துணைத்தூதர் ஜே.பி. சிங்கை அழைத்து நேற்று எச்சரித்தது. கடந்த திங்கட்கிழமையில் இருந்து அவர் இவ்வாறு அழைத்து எச்சரிக்கை விடுவது இது 5-வது முறை.

    இப்படி பாகிஸ்தான் தொடர்ந்து எல்லைப் பகுதிகளில் துப்பாக்கிச்சூடும், பீரங்கி தாக்குதலும் நடத்துவதும், இந்தியா பதிலடி கொடுப்பதும் போர் போன்ற சூழ்நிலையை உருவாக்கி உள்ளது. இதன் காரணமாக எல்லையோர கிராமங்களை சேர்ந்த மக்கள் பீதியில் உள்ளனர். அவர்கள் கூட்டம், கூட்டமாக ஊர்களை காலி செய்து விட்டு, பாதுகாப்பான இடங்களுக்கு செல்கின்றனர்.

    எல்லையில் ஆர்னியா நகர், தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது. இந்தப் பகுதியில் கால்நடைகளை கவனிக்க ஒரு சில பேர் மட்டுமே உள்ளனர். மற்றவர்கள் அனைவரும் வெளியேறி விட்டனர். இதை ஆர்.எஸ்.புரா போலீஸ் துணை சூப்பிரண்டு சுரிந்தர் சவுத்ரி உறுதி செய்தார்.

    ஜம்மு போலீஸ் துணை கமிஷனர் ராஜீவ் ரஞ்சன், “பாகிஸ்தான் தாக்குதலால் ஆர்னியா, சுசேத்கார் செக்டர்களில் 58 கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. எல்லைப்பகுதியில் வசித்து வந்த 36 ஆயிரம் பேர் தங்கள் வீடுகளை விட்டு சென்று விட்டனர்” என்று கூறினார். அவர்கள் பள்ளிக்கூடங்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

    எல்லைப்பகுதியில் அமைந்துள்ள 300-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளன.

    இதற்கிடையே உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அத்துமீறிய தாக்குதல்களில் ஈடுபட்டு வரும் பாகிஸ்தானுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    சில மாதங்களுக்கு முன் பாகிஸ்தான் கோழைத்தனமான தாக்குதல் நடத்தியது. இதில் நமது படையினர் 17 பேர் வீர மரணம் அடைந்தனர். இந்த தீவிர பிரச்சினை குறித்து பிரதமர் நரேந்திர மோடி எங்கள் அனைவரையும் கலந்து ஆலோசித்தார். அதைத் தொடர்ந்துதான் பாகிஸ்தானுக்குள் நமது ராணுவம் சென்று, பயங்கரவாதிகளை கொன்றது. இந்தியா அந்த அளவுக்கு உலகளவில் வலுவான ஒரு நாடாக ஆகி இருக்கிறது.

    நாங்கள் பகைவர்களை எங்கள் மண்ணில் மட்டும் அல்ல, அவர்கள் பகுதிக்கும் போய் தாக்கி அழிப்போம் என்ற வலுவான செய்தியை உலகத்துக்கு விடுத்து இருக்கிறோம். பாகிஸ்தானுடன் நட்புறவை பராமரிக்கத்தான் இந்தியா விரும்புகிறது. ஆனால் பாகிஸ்தான் அதற்கேற்றாற்போல இல்லை. இந்தியா ஒரு போதும் தலைகுனிவதற்கு எங்கள் அரசாங்கம் அனுமதிக்காது என்ற உறுதியை உங்களுக்கு தருகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #India #Pakistan #tamilnews
    Next Story
    ×