search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீனா மீண்டும் டோக்லாம் பகுதியில் சாலை அமைக்கிறது
    X

    சீனா மீண்டும் டோக்லாம் பகுதியில் சாலை அமைக்கிறது

    சீனா மீண்டும் டோக்லாம் பகுதியில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதுதொடர்பாக எடுக்கப்பட்ட செயற்கை கோள் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

    புதுடெல்லி:

    இந்தியா, பூடான், சீனா ஆகிய 3 நாடுகள் சந்திக்கும் இடத்தில் டோக்லாம் பகுதி அமைந்துள்ளது. இதற்கு 3 நாடுகளும் உரிமை கோரி வருவதால் பிரச்சினைக்குரிய பகுதியாக இருந்து வருகிறது.

    சீனா கடந்த ஆண்டு இந்த பகுதியை நோக்கி சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டது. அப்போது இந்திய ராணுவம் அதை தடுத்து நிறுத்தியது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே 2 மாதமாக பதட்டம் நீடித்தது. இந்தியா-சீன தலைவர்கள் சந்தித்து பேசியபின்பு பதட்டம் முடிவுக்கு வந்தது.

    இந்த நிலையில் சீனா மீண்டும் டோக்லாம் பகுதியில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதுதொடர்பாக எடுக்கப்பட்ட செயற்கை கோள் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இங்கு மிகப்பெரிய ராணுவ வளாகம் கட்டவும், இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கவும் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இதுகுறித்து சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் லூஹாங்கிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    இந்த செய்தியை நானும் படித்தேன். அந்த புகைப் படங்களை யார் கொடுத்தார்கள் என்பது தெரியவில்லை. அத்தகைய பணிகள் அங்கு நடக்கிறதா? என்பதும் தெரியவில்லை.

    டோக்லாம் பகுதியானது சீனாவுக்கு சொந்தமானது. சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட்டது. அது தொடர்பாக எந்த சர்ச்சைகளும் கிடையாது. அங்கு வசிக்கும் மக்களுக்காகவும், படைகள் சென்று வருவதை எளிமைப்படுத்தவும் சாலைகள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை சீனா மேற்கொண்டு வருகிறது.

    இந்தியா தனது பகுதிகளில் உள் கட்டமைப்பு பணிகளை மேற்கொள்வது குறித்து சீனா கருத்து தெரிவிப்பது கிடையாது. அதே போல சீன பகுதிகளில் நாங்கள் மேற்கொள்ளும் உள் கட்டமைப்பு பணிகள் குறித்து பிற நாடுகள் கருத்து தெரிவிக்க கூடாது.

    ஏற்கனவே டோக்லாமில் நடந்த முற்றுகையில் இருந்து இந்தியா படிப்பினையை கற்க வேண்டும். அதுபோல் எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க இந்தியா முன்வர வேண்டும். இதில் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜீ ஜின்பிங் இடையேயான கருத்தொற்றுமையை கடைப்பிடிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×