search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சசிகலா பெற்ற சலுகைகள் குறித்து மீண்டும் விசாரணை: கர்நாடகா அரசு ஆலோசனை
    X

    சசிகலா பெற்ற சலுகைகள் குறித்து மீண்டும் விசாரணை: கர்நாடகா அரசு ஆலோசனை

    பெங்களூரு ஜெயிலில் சலுகைகள் பெற சசிகலா லஞ்சம் கொடுத்திருப்பது பற்றி மீண்டும் ஒரு விசாரணை நடத்த கர்நாடக அரசு ஆலோசித்து வருகிறது. #sasikala #bangalore

    பெங்களூர்:

    மறைந்த ஜெயலலிதாவின் தோழி சசிகலா முறைகேடாக சொத்துக்கள் வாங்கி குவித்ததற்காக 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ளார்.

    தற்போது அவர் பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடன் முறைகேடாக சொத்து சேர்த்ததாக அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோரும் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    ஜெயிலில் சசிகலா பணத்தை லஞ்சமாக அள்ளி வீசி பல்வேறு சலுகைகளை அனுபவிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் 8-ந்தேதி சிறை துறை டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா பரப்பன அக்ரஹாரா ஜெயிலுக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினார்.

    அப்போது சசிகலாவுக்கு உணவு தயாரித்து கொடுக்க தனி சமையல் அறை உருவாக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி சிறையில் இருந்து சசிகலாவும், இளவரசியும் சட்டவிரோதமாக வெளியில் சென்று வந்ததாகவும் கூறப்படுகிறது.

    ஜெயிலுக்குள் சலுகைகளை அனுபவிக்க சசிகலா ரூ.2 கோடி வரை லஞ்சமாக கொடுத்திருப்பதாக சிறை துறை டி.ஐ.ஜி. ரூபா புகார் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 12-ந்தேதி சிறை துறை டி.ஜி.பி. சத்தியநாராயணராவிடம் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார்.

    அந்த அறிக்கையில் அவர் சிறை துறை டி.ஜி.பி. சத்தியநாராயணராவும் சசிகலாவிடம் இருந்து லஞ்சம் பெற்று இருப்பதாக குற்றம் சாட்டி இருந்தார். இது தொடர்பாக விசாரணை நடத்த கர்நாடக மாநில அரசு உத்தரவிட்டு இருந்தது.

    கர்நாடக மாநில முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் சிறைக்கு சென்று விசாரணை நடத்தினார். சசிகலாவிடமும் அவர் கேள்விகள் கேட்டு பதில் பெற்றார். பிறகு அவர் தனது அறிக்கையை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அரசிடம் தாக்கல் செய்தார்.

    அதில் அவர், ‘பரப்பன அக்ரஹாரா சிறையில் விதி மீறல்கள் நடந்திருப்பது உண்மைதான்’ என்று கூறி இருப்பதாக தெரிகிறது. மேலும் சசிகலா சலுகைகள் பெறுவதற்காக லஞ்சம் கொடுத்திருப்பது பற்றி தனியாக வேறொரு விசாரணை நடத்தி கொள்ளும் படி தனது அறிக்கையில் அவர் பரிந்துரை செய்திருந்தார்.

    வினய்குமாரின் அறிக்கையை ஏற்று சசிகலா லஞ்சம் கொடுத்திருப்பது பற்றி மீண்டும் ஒரு விசாரணை நடத்த கர்நாடக அரசு ஆலோசித்து வருகிறது. தற்போது அந்த அறிக்கை கர்நாடக மாநில தலைமை செயலாளரிடம் உள்ளது. விரைவில் புதிய விசாரணை சம்பந்தமாக அறிவிக்கை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    லோக் ஆயுக்தா அல்லது லஞ்ச ஒழிப்புத்துறை ஆகிய இரு பிரிவுகளில் ஏதாவது ஒன்றின் மூலம் விசாரணை நடத்த கர்நாடக அரசு உத்தரவிடும் என்று தெரிகிறது. இது சசிகலா மீதான பிடியை மேலும் இறுக செய்துள்ளது. #sasikala #bangalore #tamilnews

    Next Story
    ×