search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பல மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்தால் ரெயில் டிக்கெட் கட்டணத்தில் 50 சதவீதம்வரை தள்ளுபடி
    X

    பல மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்தால் ரெயில் டிக்கெட் கட்டணத்தில் 50 சதவீதம்வரை தள்ளுபடி

    ரெயில் டிக்கெட்டுகளை பல மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்தால், டிக்கெட் கட்டணத்தில் 50 சதவீதம்வரை தள்ளுபடி அளிக்கலாம் என்று ரெயில்வே வாரியம் அமைத்த குழு சிபாரிசு செய்துள்ளது.
    புதுடெல்லி:

    ரெயில் டிக்கெட்டுகளை பல மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்தால், டிக்கெட் கட்டணத்தில் 50 சதவீதம்வரை தள்ளுபடி அளிக்கலாம் என்று ரெயில்வே வாரியம் அமைத்த குழு சிபாரிசு செய்துள்ளது.

    ரெயில்களில் கட்டணத்தை மறுஆய்வு செய்வதற்காக கட்டண மறுஆய்வு குழுவை ரெயில்வே வாரியம் அமைத்தது. அதில், நிதி ஆயோக் ஆலோசகர் ரவீந்தர் கோயல் உள்ளிட்டோர் இடம் பெற்றனர்.

    இந்த குழு, ரெயில்வே வாரியத்திடம் தனது சிபாரிசுகளை சமர்ப்பித்துள்ளது. அதில், விமான நிறுவனங்கள் மற்றும் ஓட்டல்களை போன்று கட்டண முறையை பின்பற்றுமாறு சிபாரிசு செய்துள்ளது.

    கட்டண மறுஆய்வு குழுவின் முக்கியமான சிபாரிசுகள் வருமாறு:-

    பல மாதங்களுக்கு முன்பே விமான டிக்கெட் முன்பதிவு செய்தால், விமான நிறுவனங்கள் தள்ளுபடி அளிக்கின்றன. அதுபோல், ரெயில்களிலும் முன்கூட்டியே முன்பதிவு செய்பவர்களுக்கு தள்ளுபடி அளிக்கலாம்.

    முன்பதிவின்போது, எவ்வளவு காலியிடங்கள் இருக்கின்றன என்பதை பொறுத்து, 20 சதவீதம் முதல் 50 சதவீதம்வரை தள்ளுபடி அளிக்கலாம்.

    பயணிகள் இறுதி பட்டியல் தயாரித்த பிறகுகூட தள்ளுபடி அளிக்கலாம். ரெயில் புறப்படுவதற்கு 2 நாட்களுக்கு முன்பு தொடங்கி, 2 மணி நேரம் முன்பு வரை முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகளுக்கு தள்ளுபடி வழங்கலாம்.

    ரெயில்களில் கீழ் படுக்கைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கலாம். வசதியான நேரத்தில் (காலை) சேருமிடத்துக்கு போய்ச்சேரும் ரெயில்களுக்கு கட்டணத்தை உயர்த்தலாம். அதே சமயத்தில், நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணிவரை, பகல் 1 மணி முதல் 5 மணிவரை, சேருமிடங்களுக்கு போய்ச்சேரும் ரெயில்களுக்கு கட்டணத்தை குறைக்கலாம்.

    பண்டிகை காலங்களில் கட்டணத்தை உயர்த்தலாம், மற்ற மாதங்களில் கட்டணத்தை குறைக்கலாம். சமையலறை பெட்டி இணைக்கப்பட்ட ரெயில்களில் ‘பிரீமியம்’ கட்டணம் வசூலிக்கலாம். கட்டணத்தை மாற்றி அமைப்பதை ரெயில்வே கோட்டங்களிடம் விட்டு விடலாம். உள்ளூர் தேவை மற்றும் காலியிட அடிப்படையில் அவர்கள் சரியாக முடிவு எடுப்பார்கள்.

    மேற்கண்ட சிபாரிசுகள் செய்யப்பட்டுள்ளன.

    கீழ் படுக்கைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்குமாறு சிபாரிசு செய்யப்பட்டு இருந்தாலும், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள் ஆகியோருக்கு கூடுதல் கட்டணம் இன்றி கீழ் படுக்கைகள் ஒதுக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேலும், இந்த சிபாரிசுகளை அப்படியே ஏற்காமல், சில மாற்றங்களை ரெயில்வே வாரியம் செய்யும் என்றும் அவர்கள் கூறினர். 
    Next Story
    ×