search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கருத்து வேறுபாடுகளுக்கு தீர்வு காண முயற்சி - 4 மூத்த நீதிபதிகளுடன் தலைமை நீதிபதி மீண்டும் சந்திப்பு
    X

    கருத்து வேறுபாடுகளுக்கு தீர்வு காண முயற்சி - 4 மூத்த நீதிபதிகளுடன் தலைமை நீதிபதி மீண்டும் சந்திப்பு

    கருத்து வேறுபாடுகளுக்கு தீர்வு காணும் முயற்சியாக சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவும், 4 மூத்த நீதிபதிகளும் மீண்டும் நேற்று சந்தித்து 15 நிமிடம் பேசினார்கள். #CJI #DipakMisra #SupremeCourtJudges
    புதுடெல்லி:

    கருத்து வேறுபாடுகளுக்கு தீர்வு காணும் முயற்சியாக சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவும், 4 மூத்த நீதிபதிகளும் மீண்டும் நேற்று சந்தித்து 15 நிமிடம் பேசினார்கள்.

    சுப்ரீம் கோர்ட்டில் ஜனநாயகம் இல்லை என்றும், விசாரணைக்காக வழக்குகளை ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டப்படுவதாகவும் அங்கு மூத்த நீதிபதிகளாக பணியாற்றும் செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பி.லோகுர், குரியன் ஜோசப் ஆகியோர் கடந்த 12-ந்தேதி குற்றச்சாட்டுகளை கூறினார். அப்போது, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு தாங்கள் கூட்டாக எழுதிய கடிதத்தையும் அவர்கள் வெளியிட்டனர்.



    தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக அவர்கள் இப்படி குற்றச்சாட்டுகளை கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தலைமை நீதிபதிக்கு எதிராக மூத்த நீதிபதிகள் பகிரங்கமாக போர்க்கொடி உயர்த்தியது சுப்ரீம் கோர்ட்டு வரலாற்றில் இதுவே முதல் முறை ஆகும்.

    இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதால், தலைமை நீதிபதிக்கும், 4 மூத்த நீதிபதிகளுக்கும் இடையே சமரசம் செய்து வைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

    அதன்படி, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவும் மூத்த நீதிபதிகளான செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பி.லோகுர், குரியன் ஜோசப் ஆகியோரும் கடந்த செவ்வாய்க்கிழமை சந்தித்து பேசினார்கள். அதன்பிறகு நேற்று முன்தினமும் அவர்கள் மீண்டும் சந்தித்து பேசுவதாக இருந்தது. ஆனால் திடீர் உடல் நலக்குறைவின் காரணமாக நீதிபதி செல்லமேஸ்வர் நேற்று முன்தினம் கோர்ட்டுக்கு வராததால் இந்த சந்திப்பு நடைபெறவில்லை.

    இந்த நிலையில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவும், 4 நீதிபதிகளும் 2-வது முறையாக நேற்று சந்தித்து பேசினார்கள். நேற்று காலை கோர்ட்டு பணிகள் தொடங்குவதற்கு முன் இந்த சந்திப்பு நடந்தது. அவர்கள் 15 நிமிடம் பேசியதாகவும், அப்போது வேறு நீதிபதிகள் யாரும் உடன் இல்லை என்றும் சுப்ரீம் கோர்ட்டு வட்டாரங்கள் தெரிவித்தன.

    கருத்து வேறுபாடுகளுக்கு தீர்வு காணும் முயற்சியாக நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையின் போது, வழக்குகளை ஒதுக்குவதற்காக சிறப்பு அமர்வு ஒன்றை அமைப்பதற்கான வாய்ப்புகள், நீதிபதிகள் மீது புகார்கள் எழுந்தால் அதற்கு தீர்வு காண்பதற்கான செயல்திட்டம் போன்றவை குறித்து அவர்கள் ஆலோசித்ததாகவும் அந்த வட்டாரங்கள் கூறின.  #DipakMisra #SupremeCourtJudges
    Next Story
    ×