search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குஜராத் மாநிலத்தில் இஸ்ரேல் பிரதமரை காரில் நகர்வலம் அழைத்து சென்று அசத்திய மோடி
    X

    குஜராத் மாநிலத்தில் இஸ்ரேல் பிரதமரை காரில் நகர்வலம் அழைத்து சென்று அசத்திய மோடி

    குஜராத் மாநிலத்தில் இஸ்ரேல் பிரதமரை காரில் நகர்வலம் அழைத்து சென்று பிரதமர் மோடி அசத்தினார். இரு தலைவர்களும் சபர்மதி ஆசிரமத்தில் கலந்துரையாடினர். #IsraelPM #SabarmatiAshram
    ஆமதாபாத்:

    குஜராத் மாநிலத்தில் இஸ்ரேல் பிரதமரை காரில் நகர்வலம் அழைத்து சென்று பிரதமர் மோடி அசத்தினார். இரு தலைவர்களும் சபர்மதி ஆசிரமத்தில் கலந்துரையாடினர்.

    இஸ்ரேல் நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ, தன் மனைவி சாரா மற்றும் 130 பிரதிநிதிகள் அடங்கிய குழுவுடன் இந்தியாவில் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார்.

    நேற்று முன்தினம் அவர், ஆக்ராவில் யமுனை ஆற்றங்கரையில் காதல் சின்னமாய் எழிலுடன் வீற்றிருக்கிற தாஜ்மகாலை பார்வையிட்டு வியந்தார்.

    இந்த நிலையில் நேற்று அவர் பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்துக்கு சென்றார். இதன்மூலம் அந்த மாநிலத்துக்கு சென்ற மூன்றாவது உலகத்தலைவர் என்ற பெயரை அவர் தட்டிச்சென்றார். ஏற்கனவே அங்கு ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபேயும், சீன அதிபர் ஜின்பிங்கும் சென்று உள்ளனர் என்பது நினைவுகூரத்தக்கது.

    ஆமதாபாத் நகரில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் விமான நிலையத்திற்கு தனி விமானத்தில் சென்று இறங்கிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூவையும், அவரது மனைவி சாராவையும் பிரதமர் மோடி வரவேற்றார்.

    அதைத் தொடர்ந்து அங்கு இருந்து 8 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ள சபர்மதி ஆசிரமத்துக்கு பெஞ்சமின் நேட்டன்யாஹூ தம்பதியரை பிரதமர் மோடி காரில் நகர்வலமாக அழைத்துச்சென்று அசத்தினார்.



    அவர்களைப் பார்ப்பதற்காக சாலையின் இரு புறங்களில் ஏராளமான மக்கள் ஆர்வமுடன் குவிந்து இருந்தனர். வழிநெடுகிலும் சுமார் 50 மேடைகள் அமைத்து, நமது நாட்டின் பல்வேறு மாநிலங்களின் பண்பாட்டையும், கலாசாரத்தையும் பறை சாற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

    அந்த கலை நிகழ்ச்சிகளை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூவும், அவரது மனைவி சாராவும் கண்டு ரசித்தனர்.

    சபர்மதி ஆசிரமத்தில் தேசத்தந்தை மகாத்மா காந்தியின் உருவச்சிலைக்கு பெஞ்சமின் நேட்டன்யாஹூ மலர் தூவி மரியாதை செலுத்தினார். அங்கு வைக்கப்பட்டிருந்த பதிவேட்டில் அவர் கையெழுத்து போட்டார்.

    அங்கு இருந்த ராட்டையை அவர் இயக்கி மகிழ்ந்தார்.

    ஆசிரமத்துக்கு வெளியே பிரதமர் மோடியுடன் நேட்டன்யாஹூ தம்பதியர் அமர்ந்து சிறிது நேரம் அமர்ந்து வெகு இயல்பாக பேசிக்கொண்டிருந்தனர். அது மட்டுமின்றி சாரா, அங்கு காத்தாடிகளை பறக்க விட்டு குழந்தை போல குதூகலித்தார். அதைக்கண்டு பிரதமர் மோடியும், பெஞ்சமின் நேட்டன்யாஹூவும் மகிழ்ந்தனர்.

    இதற்கு மத்தியில் பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ தனது அன்புப்பரிசாக கடல் நீரை சுத்திகரித்து வழங்கும் வேன் ஒன்றை வழங்கினார். கேல் என்னும் அந்த அதிநவீன வேனை அவர்கள் காணொலி காட்சி வழியாக பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள சுய்கம் தாலுகாவுக்கு அர்ப்பணித்தனர்.

    பிரதமர் மோடியும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூவும் அங்கு கூடியிருந்த மக்களுக்கு உரை ஆற்றினர்.

    தொடர்ந்து சபர்கந்தா மாவட்டத்தில் வத்ராட்டில் உள்ள காய்கறிகளுக்கான சிறப்பு மையத்துக்கு சென்றனர்.

    ஆமதாபாத் அருகே தியோ தோலரா கிராமத்தில் தொழில் முனைவோர் மையத்தை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன் யாஹூ நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் பிரதமர் பிரதமர் மோடி பேசியபோது கூறியதாவது:-

    நான் கடந்த ஆண்டு இஸ்ரேலுக்கு சென்றிருந்தபோது, இந்த அமைப்புக்கு இஸ்ரேலுடன் பலமான உறவுகள் வேண்டும் என்று கருதினேன். அதில் இருந்து, எனது நண்பர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ இந்தியா வருவதற்காக காத்திருந்தேன். அவர் இப்போது இங்கு வந்து உள்ளார். நாங்கள் இந்த அமைப்பினை தொடங்கி வைக்கிறோம்.

    ஒட்டு மொத்தமான அமைப்பையும் புதுமையானதாக்க நாங்கள் பாடுபடுகிறோம். புதுமைகளைக் கொண்டு புதிய இந்தியாவை உருவாக்குவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ பேசுகையில்,

    “இங்கு வந்திருப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். ‘ஐ பேடு’களைப் பற்றி உலகம் அதிகளவில் அறிந்து கொண்டு இருக்கிறது. உலகம் ‘ஐகிரியேட்’ பற்றி அறிந்து கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டு உள்ளது” என்று கூறினார்.

    அவர் தனது பேச்சை “ஜெய்ஹிந்த், ஜெய் பாரத், ஜெய் இஸ்ரேல், நன்றி பிரதமர் மோடி” என்று கூறி முடித்தது குறிப்பிடத்தக்கது.  #IsraelPM #SabarmatiAshram #tamilnews 
    Next Story
    ×