search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிருப்தி நீதிபதிகளிடம் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா சமரச பேச்சு
    X

    அதிருப்தி நீதிபதிகளிடம் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா சமரச பேச்சு

    புகார் கூறிய 4 நீதிபதிகளிடம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா இன்று சமரச பேச்சு நடத்தினார். அப்போது அவர்களின் குறைகளை கேட்க முன்வந்துள்ளார். #SC #DipakMishra
    புதுடெல்லி:

    உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகளான செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பி லோகூர், குரியன் ஜோசப் ஆகியோர் திடீரென பத்திரிகையாளர்களை சந்தித்து, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது பரபரப்பு குற்றம் சாட்டினார்கள். சுப்ரீம் கோர்ட்டில் நீதித்துறை நிர்வாகம் சீர்குலைந்து விட்டதாகவும், பல்வேறு விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறுவதாகவும் தெரிவித்தனர்.



    நீதிபதிகளிடையே ஏற்பட்ட இந்த கருத்து வேறுபாடுகளை சரிசெய்ய பார் கவுன்சில் சார்பில் 7 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் மற்ற நீதிபதிகளை சந்தித்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அதன்பின்னர் நீதிபதிகளுக்கு இடையிலான பிரச்சினை முடிவுக்கு வந்துவிட்டதாகவும், உச்ச நீதிமன்றத்தின் அனைத்து நீதிமன்ற அறைகளும் வழக்கம்போல் செயல்பட்டு வருவதாகவும் பார் கவுன்சில் நேற்று அறிவித்தது. ஆனால் பிரச்சினை இன்னும் முழுமையாக தீர்க்கப்படவில்லை என்று பின்னர் தெரியவந்தது.

    இந்நிலையில், புகார் கூறிய 4  நீதிபதிகளையும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா இன்று தனது அறைக்கு அழைத்து பேசினார். சுமார் 15 நிமிடங்கள் வரை இந்த சந்திப்பு நீடித்துள்ளது. இந்த சந்திப்பின்போது, உச்ச நீதிமன்றத்தின் அனைத்து பிரச்சினைகள் குறித்தும் தலைமை நீதிபதி சமரச பேச்சு நடத்தியதாகவும், தங்களுக்குள் இருக்கும் பிரச்சினை மற்றும் கருத்து வேறுபாடுகளை பேசி தீர்த்துகொள்ளலாம் என்றும் கூறியதாகவும் தெரிகிறது. பேச்சுவார்த்தை நாளையும் தொடரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

    தலைமை நீதிபதி மற்றும் 4 நீதிபதிகளுக்கு இடையிலான பிரச்சனை இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றும், 2 அல்லது 3 நாளில் பிரச்சினை முழுமையாக தீர்க்கப்படும் என்றும் அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் கூறியது குறிப்பிடத்தக்கது. #SC #DipakMishra #tamilnews
    Next Story
    ×