search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுப்ரீம் கோர்ட் சர்ச்சை: நீதிபதி செல்லமேஷ்வருடன் பார் கவுன்சில் குழு சந்திப்பு
    X

    சுப்ரீம் கோர்ட் சர்ச்சை: நீதிபதி செல்லமேஷ்வருடன் பார் கவுன்சில் குழு சந்திப்பு

    சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி மீது நான்கு மூத்த நீதிபதிகள் புகார் கூறிய விவகாரத்தில் தீர்வை எட்டும் விதமாக நீதிபதி செல்லமேஷ்வருடன் பார் கவுன்சில் குழு சந்தித்து பேசியுள்ளது.
    புதுடெல்லி:

    சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக மூத்த நீதிபதிகளான செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பி.லோகுர், குரியன் ஜோசப் ஆகியோர் நேற்று முன்தினம் திடீரென போர்க்கொடி உயர்த்தினர். வழக்குகளை ஒதுக்குவதில் தலைமை நீதிபதி பாரபட்சம் காட்டுவதாக அவர்கள் செய்தியாளர்களிடம் கூட்டாக தெரிவித்தனர்.

    சுப்ரீம் கோர்ட்டு வரலாற்றிலேயே முதல் முறையாக நிகழ்ந்துள்ள இந்த நீதிபதிகளின் மோதல் போக்கு, நாடு முழுவதும் மிகப்பெரும் அதிர்வலைகளை கிளப்பி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் கட்சிகள் கவலையை வெளியிட்டு வருகின்றன. மேலும், அங்கு நடைபெறும் நிகழ்வுகளை மத்திய அரசும் உன்னிப்பாக கவனித்து வருகிறது.

    இதற்கிடையில், நீதிபதிகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள பிளவை சமரசமாக முடித்து வைப்பதற்காக, இந்திய பார் கவுன்சில் களம் இறங்கியுள்ளது. அதிருப்திக்குள்ளாகியுள்ள நீதிபதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த 7 உறுப்பினர்கள் கொண்ட குழுவை இந்திய பார் கவுன்சில் அமைத்திருந்தது.

    பார் கவுன்சின் தலைவர் மனன் மிஷ்ரா தலைமையில் 7 பேர் அடங்கிய சமரச குழுவினர், இன்று அதிருப்தியை வெளிப்படுத்திய மூத்த நீதிபதி செலமேஸ்வரை அவரது இல்லத்தில் சந்தித்தது. ஆனால், பேச்சுவார்த்தை தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை.

    சந்திப்பு முடிந்த பின்னர் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள பார் கவுன்சில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் ஏனைய மூன்று நீதிபதிகளை சந்தித்து பேச உள்ளதாக தெரிவித்துள்ளது.
    Next Story
    ×