search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமரின் செயலாளரை சந்திக்க தலைமை நீதிபதி மிஸ்ரா மறுப்பு
    X

    பிரதமரின் செயலாளரை சந்திக்க தலைமை நீதிபதி மிஸ்ரா மறுப்பு

    பிரதமர் மோடியின் முதன்மை செயலாளர் சிர்பேந்திரா மிஸ்ராவை சந்திக்க தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மறுத்துள்ளார்.

    புதுடெல்லி:

    சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பிலோகூர், குரியன், ஜோசப் ஆகியோர் நேற்று முதல் முறையாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது பரபரப்பு குற்றம் சாட்டினார்கள். சுப்ரீம் கோர்ட்டில் நீதித்துறை நிர்வாகம் சீர்கலைந்து விட்டதாகவும், பல்வேறு விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறுவதாகவும் தெரிவித்தனர்.

    இந்திய நீதித்துறை வரலாற்றில் இது போன்று நீதிபதிகள் வெளிப்படையாக குற்றம்சாட்டுவது இதுவே முதல் முறையாகும். இதையடுத்து பிரதமர் மோடி மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத்துடன் அவசர ஆலோசனை நடத்தினார். அதில் நீதிபதிகளின் குற்றச்சாட்டுகள் குறித்த இருவரும் ஆலோசனை நடத்தினார்கள்.

    இதுபற்றி மத்திய சட்டத்துறை இணை மந்திரி பி.பி. சவுத்ரி கூறுகையில் இந்திய நீதித்துறை உலக அளவில் புகழ் பெற்றது, சுதந்திரமானது. அது தனது பிரச்சினையை தானே தீர்த்துக் கொள்ளும். இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிடாது என்றார்.

    நீதிபதிகள் எழுப்பியுள்ள பிரச்சினைகளில் அரசுக்கு எந்த சம்பந்தமும் இல்லை, இதில் அரசு தலையிடாது, என்றாலும் இந்த புகாரால் நீதித்துறை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை கேள்விக்குறியாகி உள்ளது. எனவே சுப்ரீம் கோர்ட்டு இந்த பிரச்சினையை தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

    இதற்கிடையே பிரதமர் மோடியின் முதன்மை செயலாளர் சிர்பேந்திரா மிஸ்ரா இந்த விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுடன் ஆலோசனை நடத்தச் சென்றார். ஆனால் அவர் தீபக் மிஸ்ராவை சந்திக்க வில்லை.

    அவரை தீபக் மிஸ்ரா சந்திக்க மறுத்துவட்டதாகவும், இதன் காரணமாகவே சந்திக்காமல் திருப்பிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

    Next Story
    ×