search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உ.பி.யில் தலைமை செயலகம், காவல் நிலையத்தை தொடர்ந்து கழிப்பறைகளுக்கும் காவி நிறம்
    X

    உ.பி.யில் தலைமை செயலகம், காவல் நிலையத்தை தொடர்ந்து கழிப்பறைகளுக்கும் காவி நிறம்

    உத்தரப்பிரதேச மாநிலத்தில் தலைமை செயலகம், காவல் நிலையம், ஹஜ் அலுவலகத்தை தொடர்ந்து புதிதாக கட்டப்பட்ட 100-க்கும் மேற்பட்ட கழிப்பறைகளுக்கு காவி நிற பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளது.
    லக்னோ:

    உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்தாண்டு மார்ச் மாதம் பா.ஜ.க ஆட்சியமைத்தது. எப்போதும் காவி உடையிலேயே வலம் வரும் யோகி ஆதித்யநாத் முதல்வராக பொறுப்பேற்றார். இருக்கையில் கூட காவி நிற துணியை விரித்து அமரும் யோகி ஆதித்யநாத் வசிக்கும் முதல்வர் அலுவலகம் காவி நிறமாக மாறியது.

    இதனையடுத்து, பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட புத்தக பைகள், புதிதாக இயக்கப்பட்ட பேருந்துகள் என சர்வமும் காவியாகின. லக்னோவில் உள்ள காவல் நிலையம் காவி பெயிண்ட் அடிக்கப்பட்ட நிலையில், மாநில ஹஜ் கமிட்டி அலுவலகமும் காவியாக மாறி பின்னர் சர்ச்சையாகி வெள்ளை சுண்ணாம்பு அடிக்கப்பட்டது.

    இந்நிலையில், முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவின் சொந்த மாவட்டமான எட்டவாவில் உள்ள கிர்பான் புதுர் கிராமத்தில் மாவட்ட நிர்வாகம் மூலம் புதிதாக 100 கழிப்பிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இவை அனைத்துக்கும் காவி நிற பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளது.

    கிராம தலைவர் வேத்பால் சிங் நாயக்கின் உத்தரவுப்படி காவி நிறம் அடிக்கப்பட்டதாக கட்டுமான நிறுவனம் கூறியுள்ளது. இது தொடர்பாக பேசிய பகுதி வளர்ச்சி அதிகாரி, கழிப்பிடம் எந்த அளவு இருக்க வேண்டும் என திட்டமிடுவது மட்டும் தான் அரசின் பணி, பெயிண்ட் அடிப்பது அவரவர்களின் சொந்த விருப்பம் என்று கூறியுள்ளார்.

    உத்தரப்பிரதேசத்தில் மட்டும் பா.ஜ.க ஆளவில்லை, நாட்டையே ஆள்கிறது. காவி நிறம் அடிக்கப்பட்டால் என்ன பிரச்சனை? என்று வேத்பால் சிங் பேட்டியளித்துள்ளார். “காவி வெறும் நிறமல்ல, எங்கள் நம்பிக்கை. அதை, கழிப்பறையில் அடித்து அவமானப்படுத்தி விட்டனர்” என்று மாநில காங்கிரஸ் தலைவர் மாநில அரசை சாடியுள்ளார்.
    Next Story
    ×