search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீதித்துறையில் இதே நிலை நீடித்தால் ஜனநாயகம் நிலைக்காது: உச்சநீதிமன்ற நீதிபதிகள்
    X

    நீதித்துறையில் இதே நிலை நீடித்தால் ஜனநாயகம் நிலைக்காது: உச்சநீதிமன்ற நீதிபதிகள்

    உச்சநீதிமன்ற வளாகத்தில் கடந்த சில மாதங்களாக விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்து வருவதாகவும், இதே நிலை நீடித்தால் நீதித்துறையில் ஜனநாயகம் நிலைக்காது எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். #SupremeCourt #JusticeChelameswar

    புதுடெல்லி:

    இந்திய வரலாற்றில் முதல்முறையாக உச்சநீதிமன்ற நீதிபதிகள்  இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகளான செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், குரியன் ஜோசப், மதன் லோகூர் ஆகிய நான்கு பேரும் இந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

    நீதிபதிகள் பத்திரிக்கையாளர்களை சந்திக்கவுள்ளதையடுத்து உச்சநீதிமன்றத்தின் அனைத்து அமர்வுகளும் வழக்கு விசாரணையை முடித்து கொண்டன.

    செய்தியாளர்களிடம் பேசிய உச்சநீதிமன்ற நீதிபதி செல்லமேஸ்வர் கூறியதாவது:-

    இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அசாதாரண நிகழ்வாக நாங்கள் பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற வளாகத்தில் கடந்த சில மாதங்களாக விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்து வருகின்றன. உச்சநீதிமன்றத்தின் பாதுகாப்புக்காக நாங்கள் எடுத்த நடவடிக்கைகள் தோல்வியில் முடிந்தன. கடந்த சில மாதங்களுக்கு முன் இதுகுறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஒரு கடிதம் எழுதினோம். ஆனால் இந்த விசயத்தில் சரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதே நிலை நீடித்தால் நாட்டில் ஜனநாயகம் நிலைக்காது. 

    அனைத்து முடிவுகளையும் தலைமை நீதிபதியே எடுத்து வருகிறார். மற்ற நீதிபதிகளுக்கு அவர் வாய்ப்பு அளிக்க வேண்டும். நீதித்துறைக்கு எங்களை போன்ற மூத்த நீதிபதிகளே பொறுப்பானவர்கள். எங்கள் கவலைகளை மக்களுக்கு தெரியப்படுத்தவே செய்தியாளர்களை சந்திக்க நேர்ந்தது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை நீக்குவது பற்றி தேசம் சிந்திக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மற்றொரு உச்சநீதிமன்ற நீதிபதியான ரஞ்சன் கோகாய் பேசுகையில், உச்சநீதிமன்றத்தை பாதுகாப்பது குறித்து நாட்டு மக்களே முடிவு செய்ய வேண்டும் என குறிப்பிட்டார். #SupremeCourt #JusticeChelameswar #tamilnews
    Next Story
    ×