search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியாவின் 100-வது செயற்கைகோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்: இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதனை
    X

    இந்தியாவின் 100-வது செயற்கைகோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்: இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதனை

    இந்தியாவின் 100-வது செயற்கைக் கோளான கார்ட்டோசாட்-2 புவிவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது இஸ்ரோ வரலாற்றில் புதிய சாதனையாக, புதிய மைல் கல்லாக கருதப்படுகிறது. #ISRO #PSLV #Cartosat2
    சென்னை:

    இந்திய விண்வெளி ஆய்வுக் கழகமான “இஸ்ரோ” செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்துவதில் சாதனை மேல் சாதனை படைத்து வருகிறது.

    இந்தியாவின் இயற்கை வளங்கள், கடல் வளங்கள், தொலைத்தொடர்பு, வானிலை, பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து முக்கியத் துறைகளின் மேம்பாட்டுக்கு இஸ்ரோ அனுப்பும் செயற்கைக் கோள்கள்தான் மிகப்பெரிய பங்களிப்பை அளித்து வருகின்றன. அந்த வகையில் இந்தியாவில் இதுவரை 99 செயற்கைக் கோள்கள் விண்ணில் ஏவப்பட்டுள்ளன.

    இதையடுத்து 100-வது செயற்கைக் கோளை கடந்த சில மாதங்களாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தயாரித்து வந்தனர். “கார்ட்டோசாட்-2” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த செயற்கைக் கோள், கார்ட்டோசாட் வகையில் 7-வது செயற்கைக் கோளாகும். 710 கிலோ எடையில் இந்த செயற்கைக் கோள் தயாரிக்கப்பட்டது.

    இந்த செயற்கைக் கோளை ஜனவரி 12-ந்தேதி (இன்று) விண்ணில் செலுத்த இஸ்ரோ முடிவு செய்தது. இதற்கான 28 மணி நேர கவுன்ட் டவுன் நேற்று அதிகாலை 5.29 மணிக்கு தொடங்கியது. பி.எஸ்.எல்.வி-சி40 ராக்கெட்டில் இணைக்கப்பட்டு, எரிபொருள் நிரப்பப்பட்டு அந்த செயற்கைக் கோள் விண்ணில் செலுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதலாவது ஏவு தளத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டது.

    இன்று காலை 9.28 மணிக்கு கவுன்ட் டவுன் முடிந்ததும் கார்ட்டோசாட்-2 செயற்கைக்கோளை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி.-சி 40 ராக்கெட் தீப்பிழம்பை கக்கியப்படி விண்ணுக்குப் புறப்பட்டது. 44.4 மீட்டர் உயரம் கொண்ட அந்த ராக்கெட் விண்ணில் புறப்பட்ட பிரமிப்பூட்டுவதாக இருந்தது. இஸ்ரோ விஞ்ஞானிகளின் அடுத்தடுத்த உத்தரவுகளைத் தொடர்ந்து இந்தியாவின் 100-வது செற்கைக் கோளுடன் ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பறந்தது.

    குறிப்பிட்ட இலக்கில் ராக்கெட் மிகத்துல்லியமாக சென்றதால் இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். ஒருவருக்கு ஒருவர் கைக்குலுக்கி பாராட்டுக்களை பரிமாறிக் கொண்டனர். 100-வது செயற்கைக் கோள் திட்டமிட்டப்படி பறந்ததால் இஸ்ரோ விஞ்ஞானிகளிடம் உற்சாகம் கரை புரண்டோடியது.



    இதுபற்றி இஸ்ரோவின் தற்போதைய தலைவர் கிரண்குமார் கூறுகையில், “இந்த வெற்றியை புத்தாண்டு பரிசாக நாட்டு மக்களுக்கு இஸ்ரோ வழங்கியுள்ளது. இஸ்ரோவுக்கு வழங்கப்பட்டுள்ள பணிகள் தொடரும். இன்று விண்ணில் ஏவப்பட்டுள்ள செயற்கைக் கோள்களின் செயல்பாடுகளை தொடர்ந்து உன்னிப்பாக கவனித்து வருகிறோம்” என்றார்.

    இஸ்ரோ தலைவராக பொறுப்பேற்க உள்ள சிவன் கூறுகையில், “இது சிறப்பான வெற்றி. பெரிய தோல்விக்குப் பிறகு, அந்த தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து இந்த வெற்றியை பெற்றுள்ளோம். இந்த பெருமைகள் அனைத்தும் கடந்த 4½ மாதமாக உழைத்த விஞ்ஞானிகள் அனைவரையும் சாரும்” என்றார்.

    இன்று மொத்தம் 31 செயற்கைக் கோள்கள் விண்ணில் ஏவப்பட்டன. இதில் கார்ட்டோசாட்-2 தவிர ஒரு நானோ மற்றும் ஒரு மைக்ரோ என 3 செயற்கைக் கோள்கள் இந்தியாவுக்கானது ஆகும். மற்ற 28 செயற்கைக் கோள்களும் அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், பின்லாந்து, தென்கொரியா, இங்கிலாந்து நாடுகளுக்குரியவை.

    பி.எஸ்.எல்.வி-சி40 ராக்கெட் விண்ணில் சென்ற சில நிமிடங்களில் 1323 கிலோ எடை கொண்ட 31 செயற்கைக் கோள்களையும் ஒவ்வொன்றாக பிரிந்து தங்களது புவி வட்டப் பாதைக்கு சென்றன. 17.33 நிமிடங்களில் 31 செயற்கைக் கோள்களும் அதனதன் சுற்றுப் பாதைகளில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டன.

    இந்தியாவின் 100-வது செயற்கைக் கோளான கார்ட்டோசாட்-2 சுமார் 510 கி.மீ. உயரத்தில் அதன் புவி வட்ட சுற்றுப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. இஸ்ரோ வரலாற்றில் இது புதிய சாதனையாக, புதிய மைல் கல்லாக கருதப்படுகிறது.

    இஸ்ரோ தலைவராக தமிழ்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி சிவன் பதவியேற்க உள்ள நிலையில், இந்தியாவின் 100-வது செயற்கைக் கோள் சாதனை படைத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    கார்ட்டோசாட்-2 செற்கைக்கோள் இயற்கை வளங்களை நுட்பமாக ஆய்வு செய்யும். இதற்காக அந்த செயற்கைக் கோளில் அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தொலையுணர்வு கருவிகளும் இணைக்கப்பட்டுள்ளன.

    இது தவிர கடல் வழி போக்குவரத்து கண்காணிப்பு, நீர்வள மேம்பாடு, நகர்ப்புற உள் கட்டமைப்பு பணிகளுக்கும் இந்த செயற்கைக்கோள் தரும் தகவல்கள் உதவியாக இருக்கும். அதோடு இந்திய ராணுவத்துக்கும் கார்ட்டோசாட்-2 செயற்கைக் கோள் மிகப்பெரிய பங்களிப்பை அளிக்க உள்ளது.

    அதாவது இந்தியாவின் எல்லைப் பகுதிகளை கண்காணிக்கும் பணியை இந்த செயற்கைக் கோள் உதவியுடன் செய்ய முடியும். அது மட்டுமின்றி சர்ஜிக்கல் தாக்குதல் போன்ற அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ள இந்த செயற்கைக்கோள் வழிகாட்டும். குறிப்பாக எல்லையில் தீவிரவாதிகளின் பதுங்கு குழிகளை கண்டுபிடித்து அழிக்க இந்த செயற்கைக் கோள் தரும் தகவல்கள் பயனுள்ளதாக இருக்கும்.

    கார்ட்டோசாட்-2 ராக் கெட் மொத்தம் 5 ஆண்டுகள் விண்ணில் சுழன்று வந்து நமக்கு தகவல்கள் தரும். எனவே இந்த செயற்கைக்கோளின் சேவை மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த செயற்கைக் கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.

    விண்வெளி ஆய்வில் உலக நாடுகளுக்கு சவால் விடும் வகையில் முன்னேறி உள்ள இஸ்ரோ நிறுவனம் 1975-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19-ந்தேதி ஆர்யபட்டா செயற்கைக்கோளை முதன் முதலாக ஏவியது. 1999-ம் ஆண்டு முதல் வர்த்தக ரீதியாக வெளிநாடுகளின் செயற்கை கோள்களையும் இஸ்ரோ விண்ணில் செலுத்தி வருகிறது.

    அந்த வகையில் 28 வெளிநாடுகள் இஸ்ரோ மூலம் தங்கள் செயற்கைக் கோள்களை விண்ணுக்கு அனுப்பியுள்ளன. அந்த செயற்கைக் கோள்களையும் கணக்கிட்டால் இதுவரை இஸ்ரோ மூலம் 237 செயற்கைக் கோள்கள் விண்ணில் வெற்றிகரமாக பறக்க விடப்பட்டுள்ளன. #ISRO #PSLV #Cartosat2 #tamilnews
    Next Story
    ×