search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடப்பா மாவட்ட வனப்பகுதியில் கைதான தமிழர்கள்
    X
    கடப்பா மாவட்ட வனப்பகுதியில் கைதான தமிழர்கள்

    கடப்பா வனப்பகுதியில் 28 தமிழர்கள் கைது - செம்மரம் பறிமுதல்

    கடப்பா மாவட்ட வனப்பகுதியில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது, செம்மரக்கடத்தலில் ஈடுபட்ட 28 தமிழர்களை போலீசார் கைது செய்தனர்.

    திருமலை:

    திருப்பதியில் இருந்து கரகம்பாடி செல்லும் சாலையில் மங்கலம் பகுதியை அடுத்த ஹரிதா காலனி அருகே செம்மரக்கடத்தல் தடுப்பு அதிரடிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயநரசிம்மலு மற்றும் போலீசார் நேற்று முன்தினம் அதிகாலை 5 மணியளவில் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேனை நிறுத்திச் சோதனை செய்ய முயன்றனர்.

    அப்போது வேனை விட்டு விட்டு, அதில் வந்தவர்கள் கீழே இறங்கி தப்பி ஓடி விட்டனர். வேனில் சோதனைச் செய்தபோது, அதில் 12 செம்மரக்கட்டைகள் கடத்தி வரப்பட்டதும், ஆந்திரா மற்றும் தமிழக பதிவெண் கொண்ட இருநம்பர் பிளேட்டுகள் இருந்ததும் தெரிய வந்தது. வேனுடன், செம்மரக்கட்டைகள், அரிவாள், வாள், கடப்பாரை ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் கடப்பா மாவட்டம் ராயச்சோட்டி புறநகர் பகுதியைச் சுற்றி உள்ள வனப்பகுதியில் போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அதேபோல் உப்பரப்பள்ளி, மடிதாடு கிராமத்தில் உள்ள கிருஷ்ணாரெட்டி ஏரி அருகே போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.

    கடப்பா மாவட்ட வனப்பகுதியில் சுண்டுபள்ளி, வீரபள்ளி, சின்னமண்டேம் ஆகிய வனப்பகுதிகளில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது, அந்த வழியாக வந்த செம்மரக்கடத்தல் கும்பலுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கடத்தல்காரர்கள் கற்களை எடுத்து வீசி போலீசார் மீது திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். போலீசார் விரட்டிச்சென்று 28 பேரை கைது செய்தனர்.

    கைதானவர்கள் அனைவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து 30 செம்மரக்கட்டைகள், 8 கோடரிகள், 13 கடப்பாரைகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.  #tamilnews




    Next Story
    ×