search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய வம்சாவளி எம்.பி.க்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கான ஊக்கசக்தியாக திகழலாம்: பிரதமர் மோடி
    X

    இந்திய வம்சாவளி எம்.பி.க்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கான ஊக்கசக்தியாக திகழலாம்: பிரதமர் மோடி

    இந்தியாவின் வளர்ச்சிக்கான ஊக்கசக்தியாக வெளிநாடுகளை சேர்ந்த இந்திய வம்சாவளி எம்.பி.க்களால் திகழ முடியும் என பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
    புதுடெல்லி:

    அமெரிக்கா, இங்கிலாந்து, இலங்கை, கனடா, பிஜி, நியூசிலாந்து, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பலர் பாராளுமன்ற உறுப்பினர்களாக பதவி வகித்து வருகின்றனர்.

    அயல் நாடுகளில் வாழும் இந்திய வம்சாவளியினர் ஆண்டுதோறும் பர்வாசி பாரதிய திவாஸ் என்ற பெயரில் விழா எடுத்து கொண்டாடி வருகின்றனர்.

    அவ்வகையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் சார்பில் ஜனவரி மாதம் 9-ம் தேதி டெல்லியில் நடைபெறும் பர்வாசி பாரதிய திவாஸ் நிகழ்ச்சி கருத்தரங்கம் மற்றும் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு வெளிநாடுகளில் பாராளுமன்ற உறுப்பினர்களாக உள்ள சுமார் 285 இந்திய வம்சாவளியினருக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. 

    அதன்படி, டெல்லி சானக்யாபுரி பகுதியில் உள்ள அயல்நாடுவாழ் இந்தியர்கள் கூட்டமைப்பு அலுவலகத்தில் இன்று நடைபெற்ற வெளிநாடுகளை சேர்ந்த இந்திய வம்சாவளி எம்.பி.க்களின் முதல் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    அடிப்படை வேற்றுமைகளை எதிர்கொள்ளக்கூடிய ஒரு சித்தாந்தம் இருக்குமேயானால், அது மகாத்மா காந்தியின் சித்தாந்தமாக மட்டுமே இருக்கும், அதுதான் இந்தியாவின் சித்தாந்தம். இன்னொரு நாட்டுடனான இந்தியாவின் நட்புறவு கொடுக்கல்-வாங்கல் அடிப்படையிலானது அல்ல. மனிதாபிமானத்தின் அடிப்படையிலானதாகும்.



    இந்தியா மாறி வருகிறது. இந்தியா மாற்றம் கண்டு வருகிறது. இந்தியா வெகுதூரம் முன்நோக்கி சென்றுள்ளது. இந்தியர்களின் நம்பிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதை இங்குள்ள ஒவ்வொரு துறையிலும் உங்களால் காண முடியும்.

    இந்திய கலாசாரத்தாலும், நாகரிகத்தாலும் நிலையற்ற தன்மையில் சிக்கியுள்ள இந்த உலகத்துக்கு நல்வழி காட்ட முடியும்.

    இந்தியாவின் சரிபாதி அளவிலான அன்னிய முதலீடு கடந்த மூன்றாண்டுகளில் நமக்கு வந்துள்ளது. குறிப்பாக, கடந்த ஆண்டில் மட்டும் 16 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிலான அன்னிய முதலீடு கிடைத்துள்ளது. எனது தலைமையிலான அரசின் ‘சீரமைப்பு மற்றும் மாற்றம்’ என்ற கொள்கையால்தான் இது சாத்தியமானது.

    யாருடைய வளங்களை அபகரிப்பதிலும், மற்றவர்களின் எல்லைகளை ஆக்கிரமிப்பதிலும் நமக்கு ஆர்வமில்லை. உலக அரங்கில் இந்தியா எப்போதுமே ஆக்கப்பூர்வமான பங்களிப்பை மட்டுமே அளித்துள்ளது என்ற வகையில் அதிகரித்துவரும் இந்தியாவின் பலத்தை எண்ணி இந்திய வம்சாவளியினர் பெருமிதம் கொள்ளலாம்.

    இந்தியாவின் முன்னேற்றம் மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் உலகம் முழுவதும் உள்ள பாராளுமன்றங்களில் உறுப்பினர்களாக உள்ள இந்திய வம்சாவளியினரால் ஊக்கசக்தியாக திகழ முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×