search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓரின சேர்க்கைக்கு எதிரான மனு: அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்
    X

    ஓரின சேர்க்கைக்கு எதிரான மனு: அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்

    ஓரினச்சேர்க்கைக்கு எதிரான சட்டப்பிரிவை நீக்க கோரும் மனுவை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
    புதுடெல்லி:

    வயதுக்கு வந்த 2 நபர்கள் பரஸ்பர சம்மதத்துடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவது குற்றம் ஆகாது என கடந்த 2009-ம் ஆண்டு ஜூலை 2-ந் தேதி டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, இந்திய தண்டனை சட்டம் 377-வது பிரிவின் படி ஓரினச்சேர்க்கை குற்றச்செயல் என 2013-ம் ஆண்டு தீர்ப்பு கூறியது.

    இந்த தீர்ப்பை எதிர்த்து நாஸ் அறக்கட்டளை உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தனர். அந்த மேல்முறையீட்டு மனுக்களின் மீதான விசாரணை தற்போது நிலுவையில் உள்ளது.

    இந்த நிலையில் பிரபல நடன கலைஞர் நவ்தேஜ் சிங் ஜோகர் உள்ளிட்டோர், இந்திய தண்டனை சட்டத்தின் 377-வது பிரிவை செல்லாது என அறிவிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

    அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-

    ஓரினச்சேர்க்கையை தடை செய்யும் இந்திய தண்டனை சட்டத்தின் 377-வது பிரிவு ஓரினச்சேர்க்கையாளர்களின் வாழ்க்கையில் மிகவும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சட்டப்பிரிவினால் அவர்களுடைய உரிமைகள் நசுக்கப்படுகின்றன. மிகவும் அடிப்படை உரிமையான பாலியல் சுதந்திரம் மறுக்கப்படுகிறது. இது ஒருவரின் அடிப்படை உரிமைக்கு எதிரானதாகும். எனவே, பரஸ்பர சம்மதத்துடன் ஓரினச்சேர்க்கையாளர்களாக சேர்ந்து வாழும் ஜோடிகளை குற்றமற்றவர்களாக அறிவிக்க வேண்டும். ஓரின சேர்க்கைக்கு எதிரான 377-வது சட்டப்பிரிவை நீக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

    சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதி பதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று இந்த மனு விசாரணைக்கு வந்தது.

    அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் அரவிந்த் தத்தர் வாதாடுகையில் கூறியதாவது:-

    இந்திய தண்டனை சட்டப்பிரிவு 377-ல் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு எதிராக வரையறுக்கப்பட்டுள்ள தண்டனை அரசியல் சட்டத்துக்கு எதிரானது. ஓரினச்சேர்க்கை இயற்கைக்கு முரணானது என்று கூறி அதில் ஈடுபடும் வயது வந்த இருவரை சிறையில் அடைக்க முடியாது. பாலினச்சேர்க்கைக்கு தனக்கான ஜோடியை தேர்ந்தெடுப்பது ஒருவரின் அடிப்படை உரிமை. 377-வது பிரிவு அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று டெல்லி ஐகோர்ட்டு ஏற்கனவே 2009-ம் ஆண்டில் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. ஐகோர்ட்டு வழங்கிய இந்த தீர்ப்பை மீண்டும் உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த வாதத்தை கேட்ட நீதிபதிகள், இந்திய தண்டனை சட்டப்பிரிவு 377-ஐ நீக்க கோரும் இந்த மனுவை அரசியல் சாசன அமர்வு விசாரணைக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்தனர். #tamilnews
    Next Story
    ×