search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைதிக்கான இயக்கமான ஆர்.எஸ்.எஸ். வன்முறையை பரப்பவில்லை: மத்திய மந்திரி பேட்டி
    X

    அமைதிக்கான இயக்கமான ஆர்.எஸ்.எஸ். வன்முறையை பரப்பவில்லை: மத்திய மந்திரி பேட்டி

    தேசிய இயக்கமான ஆர்.எஸ்.எஸ். நாட்டில் அமைதியை நிலநாட்டும் இயக்கமேயொழிய வன்முறையை பரப்பும் இயக்கம் அல்ல என மத்திய மந்திரி சத்யபால் சிங் குறிப்பிட்டுள்ளார்.
    புதுடெல்லி:

    மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒடுக்குமுறைக்கு எதிராக 200 ஆண்டுகளுக்கு முன்பு பீமா கோரேகான் என்ற இடத்தில் மிகப்பெரிய யுத்தம் நடந்தது.

    இதில் பேஷ்வா படையினர் 25,000 பேரும், மகர் படையினர் 500 பேரும் கொல்லப்பட்டனர். இதன் நினைவாக பீமா கோரேகானில் வெற்றி தூண் நிறுவப்பட்டது. ஆண்டுதோறும் ஜனவரி 1-ந்தேதியன்று இந்த நினைவு தூணுக்கு தலித்துகள் ஒன்றுதிரண்டு வீர வணக்கம் செலுத்துவது வழக்கம்.

    ஆனால் இந்த ஆண்டு பீமா கோரேகான் வெற்றியை கொண்டாடுவது தேச துரோகம் என கூறி இந்துத்துவா அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதை மீறி நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான தலித்துகள் பீமா கோரேகானில் திரண்டனர். இதனால் அங்கு இரு தரப்புனருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது.

    மாநிலத்தின் பல்வேறு இடங்களில் அரசு பஸ்கள், வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. புனேயில் தலித் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார்.

    புனேயில் தேசிய நெடுஞ்சாலையை மறித்து போராட்டம் நடைபெற்றது. மும்பை, அவுரங்காபாத், தானே நகரங்களுக்கும் கலவரம் பரவியது. மும்பையில் 40 வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டன. மும்பையில் பள்ளிகள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டன. மும்பை புறநகர் மின்சார ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

    இந்த வன்முறை குறித்து விசாரணைக்கு மகாராஷ்டிர மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. உயிர் இழந்த தலித் இளைஞர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.

    வன்முறையை கண்டித்து மகாராஷ்டிரத்தில் இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அம்பேத்கர் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் மற்றும் தலித் அமைப்புகள் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து மும்பை மற்றும் புனேயில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பெருமளவில் போலீசாரும், ராணுவ படையினரும் குவிக்கப்பட்டனர்.

    இந்நிலையில், இவ்விவகாரத்தை மையமாக வைத்து இன்று பாராளுமன்ற மக்களவையில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. உறுப்பினர்களுக்கு இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது.

    நேரமல்லாத நேரத்தில் (ஜீரோ ஹவர்) குறுக்கிட்டு இந்த பிரச்சனையை எழுப்பிய காங்கிரஸ் எம்.பி. மல்லிகார்ஜுனா கார்கே, இந்த வன்முறைக்கு பின்னணியில் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகள் உள்ளதாக குற்றம்சாட்டினார். இந்த அமைப்புகள் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தலித் மற்றும் மராத்தியர்கள் இடையே பிளவை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

    இவ்விவகாரத்தில் மவுனமாக இருக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கண்டனம் தெரிவித்த மல்லிகார்ஜுனா கார்கே, தலித்துகள் தொடர்பான விவகாரத்தில் பிரதமர் எப்போதும் ‘மவுனி பாபா’ ஆக மாறி விடுவதாக கூறினார். தலித்துகளுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் பா.ஜ.க. ஆட்சி நடைபெறும் குஜராத் போன்ற மாநிலங்களில் நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். 

    மகாரஷ்டிரா மாநிலத்தில் இன்று வெடித்த வன்முறை தொடர்பாக சுப்ரீம் கோர்ட் நீதிபதி தலைமையிலான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் காங்கிரஸ் எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.

    மல்லிகார்ஜுனா கார்கேவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அவையில் பேசிய பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி அனந்த் குமார், சமீபத்தில் நடந்து முடிந்த பல மாநில சட்டசபை தேர்தல்களில் படுதோல்வி அடைந்த காங்கிரஸ் கட்சி இந்த விவகாரத்தை வைத்து அரசியல் ஆதாயம் பெற முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார்.

    இதனால், ஆத்திரம் அடைந்த காங்கிரஸ் எம்.பி.க்கள் மக்களவையின் மையப்பகுதியில் சபாநாயகரின் இருக்கை அருகே சென்று அமளியில் ஈடுபட்டனர். அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சி பலனளிக்காத நிலையில் மக்களவையை நாளைவரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.

    இந்நிலையில், பாராளுமன்ற வளாகத்தில் இன்று மாலை பேட்டியளித்த மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி சத்யபால் சிங் நாட்டில் அமைதியை நிலநாட்டும் தேசிய இயக்கமான ஆர்.எஸ்.எஸ். வன்முறையை பரப்பவில்லை என தெரிவித்துள்ளார். இந்த வன்முறை தொடர்பாக நீதி விசாரணைக்கு மகாராஷ்டிர முதல் மந்திரி தேவேந்திர பட்னவிஸ் உத்தரவிட்டுள்ளார். இந்த வன்முறைக்கு காரணம் யார்? என்ற உண்மை இந்த விசாரணையில் தெரிந்துவிடும் என்றும் அவர் குறிப்பிட்டார். #tamilnews #ministerSatypalSingh #rss #peace
    Next Story
    ×