search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சொந்த கிராமத்தில் சந்திரபாபு நாயுடு பொங்கல் கொண்டாடுகிறார்
    X

    சொந்த கிராமத்தில் சந்திரபாபு நாயுடு பொங்கல் கொண்டாடுகிறார்

    ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபுநாயுடு தனது குடும்பத்தினருடன் பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடுவதால் பாதுகாப்பு ஏற்பாடுகளை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    திருமலை:

    சந்திரபாபுநாயுடு தனது குடும்பத்தினருடன் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை தங்கள் சொந்த ஊரான நாராவாரிப்பள்ளியில் கொண்டாடுவது வழக்கம். முதல்-மந்திரியானதும், பொங்கல் பண்டிகையை சொந்த ஊரிலேயே குடும்பத்தினருடனும், பொதுமக்களுடனும் கொண்டாடி வருகிறார்.

    அதேபோல், தற்போது வருகிற பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக, முதல்-மந்திரி சந்திரபாபுநாயுடு, மனைவி புவனேஸ்வரி, மகனும் மந்திரியுமான லோகேஷ், மருமகள் பிராம்ஹினி மற்றும் பேரன் ஆகியோர் அடுத்த மாதம் (ஜனவரி) 13-ந்தேதி நாராவாரிப்பள்ளிக்கு வருகிறார். சொந்த ஊரில் 13, 14, 15-ந்தேதிகளில் தங்கி பொங்கல் பண்டிகையை கொண்டாடுகிறார். அத்துடன் பொதுமக்களுக்கும் அன்னதானம் வழங்குகிறார்.

    மேலும் நாராவாரிப்பள்ளியில் 30 படுக்கை வசதி கொண்ட கூடுதல் மருத்துவமனை கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. அங்குள்ள ஒரு திருமண மண்டபம் அருகே புதிதாக விருந்தினர் மாளிகை கட்டும் பணியும் நடந்து வருகிறது. பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊருக்கு வரும் முதல்-மந்திரி சந்திரபாபுநாயுடு, புதிய கூடுதல் மருத்துவமனை கட்டிடம், விருந்தினர் மாளிகை ஆகியவற்றை திறந்து வைக்க உள்ளார்.

    எனவே முதல்-மந்திரி சந்திரபாபுநாயுடு சொந்த ஊருக்கு வருவதை முன்னிட்டு, சித்தூர் மாவட்ட கலெக்டர் பிரதியும்ணா, சந்திரகிரியை அடுத்துள்ள நாராவாரிப்பள்ளி கிராமத்துக்கு வந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    Next Story
    ×