search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சத்தீஸ்கரில் பாதுகாப்பு மையத்தில் இருந்த 50 மாடுகள் பட்டினியால் உயிரிழப்பு
    X

    சத்தீஸ்கரில் பாதுகாப்பு மையத்தில் இருந்த 50 மாடுகள் பட்டினியால் உயிரிழப்பு

    சத்தீஸ்கரில் பாதுகாப்பு மையத்தில் இருந்த 50 மாடுகள் பட்டினியால் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அதை நடத்தி வந்த மான் கரன்லால் சாகு கைது செய்யப்பட்டார்.

    ராய்பூர்:

    இறைச்சிக்காக மாடுகளை கொல்வதை தடை செய்யும் வகையில் பல மாநிலங்களில் பசுவதை தடை சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

    இது ஒரு பக்கம் இருக்க, மாடுகள் பாதுகாப்பு மையங்களில் பட்டினியால் மாடுகள் இறப்பது தொடர் கதையாக நடந்து வருகிறது.

    சத்தீஸ்கர் மாநிலத்தில் 3 மாதங்களுக்கு முன்பு அரசு உதவியுடன் நடைபெறும் 3 பாதுகாப்பு மையங்களில் 200 மாடுகள் பட்டினியால் உயிர் இழந்தன. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    அப்போது முதல்-மந்திரி ராமன்சிங் அனைத்து மாடுகள் பாதுகாப்பு மையங்களையும் ஆய்வு செய்ய உத்தரவிட்டார். அதன்படி மாடுகள் சரியாக பராமரிக்கப்படுகிறதா? என ஆய்வு செய்யப்பட்டது.

    இந்த நிலையில் இன்னொரு பாதுகாப்பு மையத்தில் 50 மாடுகள் பட்டினியால் உயிர் இழந்த சம்பவம் நடந்துள்ளது.

    அங்குள்ள தம்தாரி மாவட்டத்தில் மகர்லோட் என்ற இடத்தில் மான் கரன்லால் சாகு என்பவர் மாடுகள் பாதுகாப்பு மையத்தை நடத்தி வந்தார். இங்கு நூற்றுக்கணக்கான மாடுகள் வளர்க்கப்பட்டன.

    கடந்த 2 வாரத்தில் இந்த மையத்தில் பட்டினியால் பல மாடுகள் இறந்ததாக தகவல் வந்தது. இதையடுத்து மாவட்ட கலெக்டர் பிரசன்னா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரச்னேஸ்சிங் ஆகியோர் அங்கு சென்று பார்வையிட்டனர். அவர்கள் நடத்திய ஆய்வில் 50-க்கும் மேற்பட்ட மாடுகள் இறந்தது உறுதி செய்யப்பட்டது.

    இறந்த மாடுகளை பண்ணைக்கு அருகே ஆங்காங்கே புதைத்து இருந்தனர். அங்கிருந்து 37 மாடுகளின் எலும்பு கூடுகள் கைப்பற்றப்பட்டன. அதில் 7 மாடுகள் கடந்த 2 நாளில் இறந்திருந்தன.

    மேலும் பல மாடுகள் உயிர் இழக்கும் நிலையில் பரிதாபமாக இருந்தன. அந்த மாடுகளை மீட்டு வேறு இடங்களுக்கு அனுப்பி வைத்தனர்.

    மாடுகள் உயிர் இழந்தது தொடர்பாக அதை நடத்தி வந்த மான் கரன்லால் சாகு கைது செய்யப்பட்டார். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். இது சம்பந்தமாக மேல் விசாரணை நடந்து வருகிறது.

    Next Story
    ×