search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜி.எஸ்.டி. வரியால் ரெயில் உணவு விலை உயருகிறது
    X

    ஜி.எஸ்.டி. வரியால் ரெயில் உணவு விலை உயருகிறது

    ஜி.எஸ்.டி. வரி காரணமாக ரெயில் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வரும் உணவு விலை 30 சதவீதத்தில் இருந்து 50 சதவீதம் வரை உயர்த்தப்படலாம் என தெரியவந்துள்ளது.
    புதுடெல்லி:

    ரெயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்காக ரெயில் நிலையங்களிலும், ரெயிலிலும் உணவு சப்ளை செய்யப்படுகிறது. காண்டிராக்டர்கள் உணவு சப்ளைக்கு ஏலம் எடுத்து இதை நடத்துகிறார்கள். இவற்றை ரெயில்வே, சுற்றுலா மற்றும் கேட்டரிங் துறை கண்காணிக்கிறது. ரெயில் உணவுகள் என்ன விலையில், என்ன அளவில் இருக்க வேண்டும் என்று ரெயில்வே கேட்டரிங் துறை முடிவு செய்கிறது.

    கடைசியாக 2012-ம் ஆண்டு உணவு விலை பட்டியல் தயாரிக்கப்பட்டு அமலுக்கு கொண்டு வரப்பட்டது.  இப்போது மீண்டும் விலையை மாற்றி அமைக்க முடிவு செய்துள்ளனர். உணவு பொருட்களின் பணவீக்க விகிதம் 2012-க்கு பிறகு இடைப்பட்ட காலத்தில 6-ல் இருந்து 7 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

    மேலும் ரெயில் நிலையங்களில் விற்கப்படும் உணவுகளுக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளது. இத்துடன் ரெயிலில் வழங்கப்படும் உணவுகளுக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி கொண்டு வரப்பட்டுள்ளது.

    மேலும் ரெயில்வே உணவு காண்டிராக்டர்கள் பயன்படுத்தும் பல்வேறு உணவு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி தனியாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக விலையை மாற்றி அமைக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.


    இதை மையமாக வைத்து இப்போது ஆய்வு செய்து புதிய விலை பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் 30 சதவீதத்தில் இருந்து 50 சதவீதம் வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் டீ, காப்பி மற்றும் காலை உணவு, மதிய சாப்பாடு என அனைத்துமே விலை உயருகிறது.

    தற்போது காப்பி, டீ விலை 7 ரூபாயும், காலை உணவு 30 ரூபாயும், காலை அசைவ உணவு 35 ரூபாயும், மதிய சாப்பாடு 50 ரூபாயும், அசைவ உணவு 55 ரூபாயும் விலை உள்ளது. இவை ஒவ்வொன்றிலும் 30 சதவீதத்தில் இருந்து 50 சதவீதம் வரை விலை உயரும்.

    இந்த விலை உயர்வு சம்பந்தமாக ரெயில்வே கேட்டரிங் துறை ரெயில்வேயின் பல்வேறு நிதி சம்பந்தப்பட்ட துறைகளுக்கும் பட்டியலை அனுப்பி ஆய்வு செய்துள்ளது.

    அதைத்தொடர்ந்து ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் முன்னிலையில் இது சம்பந்தமாக ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. விரைவில் விலை உயர்வு அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    நாட்டில் ஓடும் 800 ரெயில்களில் உணவு தயாரிப்பு பெட்டி இணைக்கப்பட்டுள்ளது. அதில் இருந்து அந்த ரெயில்களுக்கு உணவு சப்ளை செய்கிறார்கள். இத்துடன் 300 காண்டிராக்டர்கள் உணவு சப்ளை செய்வதற்கு டெண்டர் எடுத்து சப்ளை செய்து வருகிறார்கள்.
    Next Story
    ×