search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    8 எம்.பி. தொகுதிகளில் விரைவில் இடைத்தேர்தல்
    X

    8 எம்.பி. தொகுதிகளில் விரைவில் இடைத்தேர்தல்

    காலியாக இருக்கும் 8 எம்.பி. தொகுதிகளில் விரைவில் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதால் மீண்டும் காங்கிரஸ் - பாரதிய ஜனதா இடையே பலத்த பலப்பரீட்சை நடைபெற உள்ளது.
    புதுடெல்லி:

    குஜராத், இமாச்சல பிரதேச மாநிலங்களில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது.

    என்றாலும் குஜராத்தில் காங்கிரசுக்கு கடந்த தேர்தலை விட இந்த தடவை கூடுதலாக 19 தொகுதிகளில் வெற்றி கிடைத்தன. இதை தங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக காங்கிரஸ் தலைவர்கள் கருதுகிறார்கள்.

    இதைத் தொடர்ந்து அடுத்தக் கட்டமாக கர்நாடகா, நாகலாந்து, திரிபுரா உள்பட 5 மாநிலங்களுக்கு இன்னும் 4 மாதங்களில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் பலப்பரீட்சை நடத்த பா.ஜ.க. வும் காங்கிரசும் தயாராகி வருகின்றன. குறிப்பாக கர்நாடகாவில் ஆட்சியைக் கைப்பற்ற இப்போதே பா.ஜ.க.வும், காங்கிரசும் வரிந்து கட்ட தொடங்கிவிட்டன.

    மாநில சட்டசபை தேர்தல்களில் அதிக வெற்றிகள் பெறுவதன் மூலம் 2019 பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதை உறுதி செய்ய முடியும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் கருதுகிறார். இந்த நிலையில் 8 பாராளுமன்ற தொகுதிகள் காலியாக இருப்பதால், அந்த இடங்களுக்கு முதலில் இடைத்தேர்தலை நடத்த தேர்தல் கமி‌ஷன் திட்டமிட்டுள்ளது. இன்னும் 2 மாதங்களில் அந்த 8 தொகுதிகளுக்கான தேர்தல் வர உள்ளது.

    காலியாக உள்ள அந்த 8 எம்.பி. தொகுதிகள் விவரம் வருமாறு:-

    1. அஜ்மீன் (ராஜஸ்தான்). 2. அல்வர் (ராஜஸ்தான்). 3. கோரக்பூர் (உத்தர பிரதேசம்), 4. பல்பூர் (உத்தரபிரதேசம்),  5. அனந்த்நாக் (காஷ்மீர்), 6. அரரியா (பீகார்), 7. உலுபெரியா (மேற்கு வங்கம்), 8. பண்டரா கொண்டியா (மராட்டியம்)

    இந்த 8 தொகுதிகளில் 7 தொகுதிகள் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் இருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த 8 எம்.பி. தொகுதி இடைத்தேர்தல்களில் வெற்றி பெறுவது பா.ஜ.க.வின் அடுத்த கவுரவ பிரச்சினையாக மாறி உள்ளது.

    2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு இது ஒரு உரைகல்லாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் இந்த 8 தொகுதி இடைத்தேர்தல்களில் தீவிர கவனம் செலுத்த ராகுலும் திட்டமிட்டுள்ளார்.

    இதனால் இந்த 8 தொகுதிகளிலும் பா.ஜ.க.- காங்கிரஸ் இடையே பலத்த பலப்பரீட்சை நடைபெற உள்ளது.
    Next Story
    ×