search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டத்தில் பங்கேற்க வந்த பிரதமர் மோடிக்கு, அமித்ஷா இனிப்பு ஊட்டிய போது எடுத்த படம்
    X
    பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டத்தில் பங்கேற்க வந்த பிரதமர் மோடிக்கு, அமித்ஷா இனிப்பு ஊட்டிய போது எடுத்த படம்

    அதீத நம்பிக்கை மற்றும் மெத்தனப்போக்கை விட்டுவிடுங்கள்: பா.ஜனதாவினருக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்

    பா.ஜனதாவினர் யாரும் அதீத நம்பிக்கை மற்றும் மெத்தனப்போக்குடன் இருக்க வேண்டாம் என கட்சியின் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார்.
    புதுடெல்லி:

    குஜராத் மற்றும் இமாசல பிரதேசத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்று உள்ளது. இதில் குஜராத்தில் கட்சி பெற்ற ஓட்டு சதவீதம் அதிகரித்து இருந்தாலும், கடந்த முறையைவிட தொகுதிகளின் எண்ணிக்கை குறைந்து இருக்கிறது.

    இந்த நிலையில் பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டம் நேற்று டெல்லியில் நடந்தது. கட்சித்தலைவர் அமித்ஷா, பிரதமர் மோடி மற்றும் மத்திய மந்திரிகள் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். இதில் உரையாற்றிய பிரதமர் மோடி கட்சியினருக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். அவர் பேசும்போது கூறியதாவது:-



    இந்திரா காந்தி ஆட்சிக்காலத்தில் ஒருமுறை 18 மாநிலங்களில் ஆட்சியமைத்து காங்கிரஸ் சாதனை படைத்து இருந்தது. ஆனால் தற்போது பா.ஜனதாவும், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளும் 19 மாநிலங்களில் ஆட்சியில் இருக்கின்றன. குஜராத்தில் கட்சிக்கு கிடைத்த தொகுதிகளின் எண்ணிக்கை குறைந்தாலும், பெற்ற ஓட்டு சதவீதம் அதிகரித்து இருக்கிறது.

    எனினும் பா.ஜனதா தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் அதீத நம்பிக்கை மற்றும் மெத்தனப்போக்கை விட்டுவிட்டு, மிகப்பெரிய மைல்கற்களை வென்றெடுக்கும் நோக்கில் கடினமாக உழைக்க வேண்டும். இதற்காக நாடு முழுவதும் கட்சியின் அடித்தளத்தை வலுப்படுத்த வேண்டும்.

    தேர்தல் பிரசாரத்தின் வேராக கருதப்படும் பூத் மட்டத்தில் செய்யப்படும் பணிகள், தேர்தல் வெற்றிக்கு தாயாக அமையும். எனவே பூத் மட்டத்தில் கட்சி வலுவாய் இருப்பது மிகவும் முக்கியமானது. அத்துடன் மக்களின் ஆசீர்வாதமும் கட்சிக்கு சாதகமான நிலையை ஏற்படுத்தும்.

    கட்சிப்பணிகளில் இளைய தலைமுறையினர் இணைய வேண்டும். கட்சியின் அனைத்து அமைப்புகளிலும் இளம் தலைவர்களை அடையாளம் கண்டு, கட்சிக்கு உள்ளேயும், வெளியேயும் அவர்களை வளர்த்தெடுக்க வேண்டும்.

    குஜராத்தில் காங்கிரஸ் கட்சி தார்மீக ரீதியாக வெற்றி பெற்றதாக கூறினாலும், அங்கு பா.ஜனதாதான் மிகப்பெரிய வெற்றி பெற்று இருக்கிறது. பா.ஜனதாவுக்கு எதிராக காங்கிரசின் தவறான பிரசாரத்தால் கட்சியினர் யாரும் பாதிக்கப்படக்கூடாது.

    இவ்வாறு மோடி கூறினார்.

    இந்த உரையின் போது குஜராத்தில் கட்சியை வளர்த்ததில் வாஜ்பாய் உள்ளிட்ட மூத்த தலைவர்களின் பங்களிப்பையும், தன்னைப்போன்ற தலைவர்களை அவர்கள் வளர்த்தெடுத்த விதத்தையும் மோடி உணர்ச்சி பொங்க எடுத்துக்கூறினார். அதைப்போல தன்னைவிட இளையவரான அமித்ஷாவை தான் வளர்த்தெடுத்தது குறித்தும் மோடி விவரித்தார்.
    Next Story
    ×