search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாரதிய ஜனதா ஆட்சியைப் பிடித்துள்ள இமாசலபிரதேசத்தில் முதல்-மந்திரி பதவி யாருக்கு?
    X

    பாரதிய ஜனதா ஆட்சியைப் பிடித்துள்ள இமாசலபிரதேசத்தில் முதல்-மந்திரி பதவி யாருக்கு?

    பாரதிய ஜனதா ஆட்சியைப் பிடித்துள்ள இமாசலபிரதேசத்தில் முதல்-மந்திரி பதவிக்கு மத்திய மந்திரி ஜே.பி. நட்டா பெயர் அடிபடுகிறது.
    சிம்லா:

    காங்கிரஸ் ஆட்சி நடந்து வந்த இமாசல பிரதேசத்தில், சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது.

    ஆனால் இந்தத் தேர்தலில் அந்தக் கட்சியால் முதல்-மந்திரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த பிரேம்குமார் துமால் சற்றும் எதிர்பாராத வகையில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    அவர் மட்டுமல்ல, அவரது தீவிர ஆதரவாளர்கள் என கருதப்படுகிற குலாப் சிங், ரவீந்தர்சிங் ரவி, மாநில பாரதிய ஜனதா தலைவர் சத்பால் சிங் சாட்டி, ரன்திர் சர்மா, கே.எல். தாக்குர், விஜய் அக்னிகோத்ரி ஆகியோரும் தோல்வியை தழுவினர்.

    பிரேம் குமார் துமால் தோல்வியால் இமாசலபிரதேசத்தில் முதல்-மந்திரி நாற்காலியை அலங்கரிக்கப்போகிற அதிர்ஷ்டக்காரர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

    பாரதிய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூடி புதிய முதல்-மந்திரியை தேர்வு செய்ய உள்ளனர். இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள மேலிட பார்வையாளர்களாக ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன், ஊரக வளர்ச்சித்துறை மந்திரி நரிந்தர் தோமர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    புதிய முதல்-மந்திரி பதவிக்கு மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி. நட்டா பெயர் பலமாக அடிபடுகிறது.



    அதே நேரத்தில் 7-வது முறை வென்றுள்ள மொகிந்தர் சிங், 5-வது முறை வெற்றி பெற்ற ராஜீவ் பிந்தால், 4-வது முறை வெற்றி பெற்றிருக்கிற மாநில பாரதிய ஜனதா முன்னாள் தலைவர் சுரேஷ் பரத்வாஜ் மற்றும் கிருஷன் கபூர் ஆகியோரது பெயர்களும் அடிபடுகின்றன.

    பிரேம் குமார் துமால் தலைமையில் தேர்தலை சந்தித்ததால் அவரையே முதல்-மந்திரி ஆக்க வேண்டும் என்று ஒரு தரப்பினர் வலியுறுத்துவதாகவும், அவருக்காக தனது தொகுதியை விட்டுத்தர குட்லஹார் என்ற எம்.எல்.ஏ., தயாராக இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

    ஆனால் தேர்தலில் தோல்வி அடைந்த ஒரு தலைவரை முதல்-மந்திரி பதவியில் அமர்த்துவதற்கு வாய்ப்பு பிரகாசமாக இருக்காது என்றும் சொல்லப்படுகிறது.

    புதிய முதல்-மந்திரி தேர்வு பற்றி கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், “முதல்-மந்திரி பதவிக்கு மூத்த மற்றும் அனுபவம் வாய்ந்த தலைவர்கள் பலர் இல்லை. கட்சி மேலிடம் புதிய முதல்-மந்திரியை தேர்வு செய்வதில் பிரச்சினை இல்லை. இதற்கு ஏற்ற வகையில் மேலிட பார்வையாளர்களிடம் கருத்து தெரிவிக்கப்படும்” என்று கூறினார்.

    எனவே அனுபவம் வாய்ந்த தலைவர் என்ற அடிப்படையில் மத்திய மந்திரி ஜே.பி. நட்டாவுக்கு, இமாசல பிரதேச முதல்-மந்திரி நாற்காலி கிடைக்க வாய்ப்பு அதிகமாக உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
    Next Story
    ×