search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2019 பாராளுமன்ற தேர்தலில் மோடிக்கு ராகுல் கடும் சவாலாக இருப்பார்: நிபுணர்கள் சொல்கின்றனர்
    X

    2019 பாராளுமன்ற தேர்தலில் மோடிக்கு ராகுல் கடும் சவாலாக இருப்பார்: நிபுணர்கள் சொல்கின்றனர்

    காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மீதான சிறுபிள்ளை என்ற எண்ணம் மாறி விட்டதாகவும், 2019 பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடும் சவாலாக இருப்பார் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
    புதுடெல்லி:

    2014 பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி இதுவரை இல்லாத அளவுக்கு படுதோல்வியை சந்தித்தது. அதன் பிறகு காங்கிரசை வலுப்படுத்தும் முயற்சிகளில் ராகுல்காந்தி ஈடுபட்டார்.

    அடுத்து நடந்த பல்வேறு மாநில சட்டசபை தேர்தல்களில் அவர் தீவிர பிரசாரங்களை மேற்கொண்டார்.

    அந்த கால கட்டத்தில் பிரதமர் மோடியையும், பாரதிய ஜனதா அரசையும் ராகுல்காந்தி விமர்சித்த போது, அவரை பாரதிய ஜனதா கட்சியினர் பப்பு என்று கிண்டலடித்தார்கள். பப்பு என்றால் விவரம் தெரியாத சிறுபிள்ளை என்று அர்த்தம்.

    மோடியின் கேள்விகளுக்கு ராகுல்காந்தி பதில் சொல்ல திணறியது, சில வி‌ஷயங்களில் அவருடைய கருத்துக்கள் தாக்கத்தை ஏற்படுத்தாமல் போனது போன்றவை ராகுல்காந்தி மீது அப்படி ஒரு எண்ணத்தை ஏற்படுத்தி இருந்தது.

    குஜராத் தேர்தலுக்கு முன்பு வரை பப்பு என்ற விமர்சனம் தொடர்ந்து நீடித்து வந்தது. ஆனால், சமீபகாலமாகவே ராகுல் காந்தியிடம் ஒரு முதிர்ச்சி ஏற்பட்டு இருந்ததை காண முடிந்தது.

    அவருடைய ஒவ்வொரு பேச்சும் விவரம் அடங்கியதாக இருந்தது. அதிலும் குஜராத் தேர்தல் பிரசாரத்தில் அவர் மிக தெளிவாக பிரசாரங்களை மேற்கொண்டார். அவர் எடுத்து வைத்த கருத்துக்கள் மக்களிடம் எடுபட்டது.

    மோடி கேள்விக்கு ராகுல் திணறிய காலம் மாறி போய் ராகுல் கேள்விக்கு மோடி திணறும் நிலை உருவானது. ராகுலின் பல கேள்விகளுக்கு மோடியால் பதில் சொல்ல முடியவில்லை.

    ராகுல்காந்தி குஜராத்தில் உள்ள வளர்ச்சி திட்டங்களை மையமாக வைத்தே பேசினார். ஆனால், பாரதிய ஜனதா கட்சியினர் பிரசாரம் முழுவதும் பாகிஸ்தான், தீவிரவாதம் என்ற கோணத்தில் மட்டுமே இருந்தது.

    ராகுல்காந்தியின் பிரசாரம் குஜராத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதால் பாரதிய ஜனதாவுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது. பிரதமர் நரேந்திர மோடியும், கட்சி தலைவர் அமித் ஷாவும் குஜராத்திலேயே முகாமிட்டு தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.



    அவர்கள் இருவருக்குமே குஜராத் சொந்த மாநிலம் என்பதால் இங்கு தோல்வி ஏற்பட்டு விட்டால் அது பெரும் பின்விளைவுகளை ஏற்படுத்தி விடும் என கருதி பிரசார யுக்திகளை கடுமையாக்கி பிரசாரங்களை மேற்கொண்டனர்.

    இதன் காரணமாக பாரதிய ஜனதாவுக்கு வெற்றி கிடைத்து இருந்தாலும் இதை பெரும் வெற்றியாக கருத முடியாத நிலையே உள்ளது. மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் 99 இடங்களை மட்டுமே பாரதிய ஜனதா கைப்பற்றி இருக்கிறது. அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சி 80 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

    கடந்த தேர்தலில் 61 இடங்களை மட்டுமே பெற்றிருந்த காங்கிரஸ் இப்போது கூடுதலாக 19 இடங்களை பெற்று இருக்கிறது. அது மட்டும் அல்ல, ஓட்டு சதவீதமும் காங்கிரசுக்கு முன்பை விட மிகவும் அதிகரித்துள்ளது. இவை எல்லாவற்றுக்கும் ராகுல்காந்தியின் பிரசாரம் தான் காரணம் என்று கூறுகிறார்கள்.

    ராகுல்காந்தியின் பேச்சு அவருடைய செயல்பாடுகள் எல்லாவற்றிலுமே இப்போது மிகுந்த வேறுபாடு உள்ளது. அவர் மீது பப்பு (சிறுபிள்ளை) என்ற எண்ணம் மாறி விட்டது. அவர் 2019 பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடும் சவாலாக இருப்பார் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

    ஜி.எஸ்.டி., பணமதிப்பிழப்பு போன்றவற்றில் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை மையமாக வைத்தே காங்கிரஸ் பிரசாரம் மேற்கொண்டது.



    ஜி.எஸ்.டி. பாரதிய ஜனதாவை பாதித்து உள்ளது என்பதை உறுதிப்படுத்தப்படாவிட்டாலும் பண மதிப்பிழப்பு பிரச்சினை பாரதிய ஜனதாவை பாதித்து இருக்கிறது என்பதை குஜராத்தில் உணர முடிந்தது. ஏனென்றால் கிராம பகுதி மக்கள் பெரும்பாலோர் பாரதிய ஜனதாவுக்கு எதிராக ஓட்டு அளித்து இருக்கிறார்கள்.

    இதேபோல் இனிவரும் தேர்தல்களில் பொருளாதார ரீதியான பிரச்சினைகளை காங்கிரஸ் கையில் எடுக்க திட்டமிட்டுள்ளது.

    விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதார விலை. விவசாய கடன் தள்ளுபடி செய்யாமை போன்ற வி‌ஷயங்களையும், சமூகநல திட்டங்களில் உள்ள குறைபாடுகளையும் சுட்டிக்காட்டி பாரதிய ஜனதாவுக்கு எதிராக மக்களை ஈர்க்கும் முயற்சியில் ஈடுபட உள்ளனர். இது காங்கிரசுக்கு ஓரளவு கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    2019 பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதிலும் பாரதிய ஜனதாவுக்கு கடும் சவாலை ஏற்படுத்த காங்கிரஸ் திட்டமிட்டு இருக்கிறது.

    அதைத்தொடர்ந்து பாராளுமன்ற தேர்தலையும் சந்திக்க இப்போதே வியூகம் அமைக்கும் பணிகளை காங்கிரஸ் தொடங்கி விட்டது. எனவே, இன்னும் 18 மாதங்கள் பாரதிய ஜனதா பெரும் சவால்களை சந்திக்க வேண்டி இருக்கும் என்றே கருதப்படுகிறது.
    Next Story
    ×