search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிராம பகுதிகளில் அமோக ஆதரவை பெற்ற காங்கிரஸ்
    X

    கிராம பகுதிகளில் அமோக ஆதரவை பெற்ற காங்கிரஸ்

    குஜராத் சட்டசபை தேர்தலில் பா.ஜனதா வெற்றிக்கு நகர பகுதியே கைகொடுத்துள்ளது. அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சி கிராம பகுதிகளில் அதிக இடங்களை கைப்பற்றி இருக்கிறது.

    அகமதாபாத்:

    குஜராத் சட்டசபை தேர்தலில் பா.ஜனதா வெற்றிக்கு நகர பகுதியே கைகொடுத்துள்ளது. அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சி கிராம பகுதிகளில் அதிக இடங்களை கைப்பற்றி இருக்கிறது.

    அதேபோல் சவுராஷ்டிரா பகுதியிலும் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது.

    சவுராஷ்டிரா பகுதியில் மொத்தம் 48 தொகுதிகள் உள்ளன. இதில் 29 இடங்களை காங்கிரஸ் பெற்றுள்ளது. பா.ஜனதா 18 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

    நகரம் மற்றும் சிறு நகர பகுதிகளில் பா.ஜனதாவுக்கு அமோக ஆதரவு இருந்துள்ளது. மாநிலத்தில் மொத்தம் 73 தொகுதிகள் நகர பகுதியில் அமைந்துள்ளன. இதில், பா.ஜனதா 55 இடங்களை கைப்பற்றி உள்ளது. காங்கிரசுக்கு 18 இடங்கள் மட்டுமே கிடைத்தன.

    கிராம பகுதிகளில் மொத்தம் 109 இடங்கள் உள்ளன. அதில், 62 இடங்களில் காங்கிரசும், 43 இடங்களில் பா.ஜனதாவும் வெற்றி பெற்றுள்ளன.

    பட்டேல் சமூக தலைவரான ஹர்திக் பட்டேல் காங்கிரசுக்கு ஆதரவாக இருந்ததாக இந்த சமூகத்தினரின் ஓட்டு பெருமளவு காங்கிரசுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் எதிர்பார்த்த அளவுக்கு இந்த ஓட்டுகள் காங்கிரசுக்கு வரவில்லை என்றே கூறப்படுகிறது.

    ஏனென்றால் நகர பகுதிகளில் உள்ள பட்டேல் சமூகத்தினர் பா.ஜனதாவுக்கு ஓட்டு அளித்துள்ளனர். அதே நேரத்தில் கிராம பகுதி பட்டேல் சமூகத்தினர் மட்டுமே காங்கிரசுக்கு ஓட்டு அளித்திருக்கிறார்கள்.

    வடக்கு குஜராத்தில் பட்டேல் சமூகத்தினர் அதிகமாக வசிக்கிறார்கள். எனவே, காங்கிரசுக்கு இங்கு பெரும் வெற்றி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    இங்கு மொத்தம் உள்ள 32 தொகுதிகளில் காங்கிரஸ் 17 இடங்களை கைப்பற்றி இருந்தது. பா.ஜனதா 15 இடங்களில் வெற்றி பெற்றது. பட்டேல் சமூகத்தினர் ஒட்டுமொத்தமாக காங்கிரசை ஆதரித்து இருந்தால் இங்கு ஒரு சில தொகுதிகளில் மட்டுமே பா.ஜனதா வெற்றி பெற்று இருக்கும். ஆனால், காங்கிரசை விட 2 தொகுதிகள் மட்டுமே பா.ஜனதா குறைவாக பெற்றுள்ளது.

    இதற்கு முக்கியமான காரணம் ஒன்று கூறப்படுகிறது. பட்டேல் சமூகத்திலேயே கத்வா பிரிவு, லேவா பிரிவு என 2 இனங்கள் உள்ளன. இதில், ஹர்திக் பட்டேல் கத்வா பிரிவை சேர்ந்தவர். ஆனால் வடக்கு குஜராத்தில் லேவா பிரிவு பட்டேல் சமூகத்தினரே அதிகம் உள்ளனர். அவர்கள் ஹர்திக் பட்டேலுக்கு ஆதரவாக இல்லை என்பது இந்த தேர்தல் முடிவு காட்டுகிறது.

    அதேபோல் வடக்கு குஜராத்தில் இதர பிற்படுத்தப்பட்ட மக்களும் அதிகமாக உள்ளனர். இந்த இன தலைவரான அல்பேஸ்தாகூர் காங்கிரசில் சேர்ந்தார்.

    ஆனாலும் கூட அவரால் இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் ஓட்டுகளை காங்கிரசுக்கு பெற்று தர முடியவில்லை. இதனால் தான் வடக்கு குஜராத்தில் காங்கிரசுக்கு எதிர்பார்த்த ஓட்டு கிடைக்காமல் போய் உள்ளது.

    சவுராஷ்டிரா பகுதியில் கிடைத்த வெற்றி போல் வடக்கு குஜராத்திலும் காங்கிரசுக்கு வெற்றி கிடைத்திருந்தால் குஜராத்தில் அது திருப்புமுனையை ஏற்படுத்தி இருக்கும்.


    Next Story
    ×