search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர், முதல்வர் பிரசாரம் செய்வதை தடுக்க வேண்டும்: சிவசேனா எம்.பி. சொல்கிறார்
    X

    பிரதமர், முதல்வர் பிரசாரம் செய்வதை தடுக்க வேண்டும்: சிவசேனா எம்.பி. சொல்கிறார்

    கோடி கணக்கில் அரசு பணம் செலவிடப்படுவதால் தேர்தல் பிரசார கூட்டங்களில் பிரதமர், முதல்-மந்திரிகள் ஈடுபடுவதை தடை செய்யும் வகையில் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ரவுத் தெரிவித்துள்ளார்.
    மும்பை:

    சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேட்டில் அக்கட்சியின் எம்.பி. சஞ்சய் ரவுத் எழுதியுள்ள கட்டுரையில் கூறி இருப்பதாவது:-

    குஜராத் தேர்தலின் போது பிரதமர் தொடர்பாக சில கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. இந்த சேற்றுக்குள் பிரதமர் குதித்ததாலேயே இவ்வாறு நடைபெற்றது. அது தற்போது நிறுத்தப்பட வேண்டும். எனவே தேர்தல் பிரசாரங்களில் பிரதமர், முதல்-மந்திரிகள் ஈடுபடுவதை தடை செய்யும் வகையில் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும்.

    பாராளுமன்றத்தின் ஒவ்வொரு கூட்டத்தொடரிலும், புதிய சட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. தேர்தல் பிரசார கூட்டங்களில் பிரதமர், முதல்-மந்திரிகள் கலந்து கொள்வதை தடை செய்யும் வகையில் சட்டம் இயற்ற அனைவரும் முயற்சி எடுக்க வேண்டும்.

    அரசு கருவூலத்தில் இருந்த நிதியில் பெரும் பகுதி காங்கிரசால் ஏற்கனவே கொள்ளையடிக்கப்பட்டு விட்டது. அதை எதிர்த்தவர்கள் இப்போது ஆட்சியில் இருக்கிறார்கள். ஆனால் அரசு கருவூலத்தில் கொள்ளையடிக்கப்படுவது மட்டும் நிறுத்தப்படவில்லை.

    பிரசார கூட்டங்களில் பிரதமர், முதல்-மந்திரிகள் கலந்து கொள்ளும் போது அவர்களுக்காக அரசு நிதியும், அரசு எந்திரமும் பயன்படுத்தப்படுகிறது.



    அவர்களுக்காக செலவிடப்படும் அரசு நிதியை அவர்கள் சார்ந்த கட்சியிடம் இருந்து வசூலிக்க வேண்டும். அது மன்மோகன் சிங்கோ அல்லது நரேந்திர மோடியோ யாராக இருந்தாலும் ஒன்று தான். குஜராத்தில் மோடி 40 முதல் 50 தேர்தல் பிரசார கூட்டங்களில் கலந்து கொண்டார். இதற்கு அவர் அரசாங்கத்துக்கு சொந்தமான விமானத்தையும், ஹெலிகாப்டரையுமே பயன்படுத்தினார். பிரதமராக இருந்து கொண்டு தேர்தல் பிரசாரத்துக்காக கோடிக்கணக்கில் அரசு பணத்தை அவர் செலவிட்டார். அவருக்கு முன்பு பிரதமர் பதவியில் இருந்தோரும் இதற்கு விதி விலக்கு அல்ல.

    மத்திய அரசு தேர்தல் தொழிற்சாலையாகி விட்டது. கர்நாடகத்துக்கு இன்னும் 3 மாதங்களில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு 6 மாதங்களில் ராஜஸ்தான், மத்திய பிரதேசத்துக்கு தேர்தல் நடக்க உள்ளது. தேர்தலில் எப்படி வெற்றி பெறுவது என்பதுதான் மத்திய அரசின் கவலையாக உள்ளது.

    பாராளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதன் மூலமாகவோ அல்லது பிரதமர், முதல்-மந்திரிகள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடாமல் தடை செய்வதன் மூலமாகவோதான் இவை அனைத்துக்கும் முடிவு கட்ட முடியும். இல்லாவிட்டால் பதவிகளை அவர்கள் ராஜினாமா செய்து விட்டு தேர்தலில் தங்களது ஆட்சிக்காக பிரசாரம் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×