search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குஜராத், இமாசலபிரதேசத்தில் இன்று ஓட்டு எண்ணிக்கை - ஆட்சியை கைப்பற்றப்போவது யார்?
    X

    குஜராத், இமாசலபிரதேசத்தில் இன்று ஓட்டு எண்ணிக்கை - ஆட்சியை கைப்பற்றப்போவது யார்?

    குஜராத், இமாசலபிரதேச மாநில சட்டசபை தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது.
    காந்திநகர்:

    குஜராத் மற்றும் இமாசலபிரதேச மாநில சட்டசபைகளின் ஆயுட்காலம் முடிவடைவதை யடுத்து இந்த 2 மாநிலங்களிலும் தேர்தல் நடைபெற்றது.

    182 சட்டசபை உறுப்பினர்களைக் கொண்ட குஜராத் சட்டசபைக்கு 2 கட்டங்களாக கடந்த 9 மற்றும் 14-ந்தேதிகளில் தேர்தல் நடந்தது.

    மாநிலத்தில் தொடர்ந்து 22 ஆண்டுகளாக ஆளும் கட்சியாக பா.ஜனதா உள்ளது. இதனால் இந்த முறை ஆட்சியை கைப்பற்றுவதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். அவர் தொடர்ந்து 3 மாதங்கள் குஜராத் மாநிலத்தில் பிரசாரம் மேற்கொண்டார்.



    மத்திய அரசின் பண மதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. வரி விதிப்பு ஆகியவற்றை ராகுல்காந்தி கடுமையாக விமர்சித்தார். மாநிலத்தில் பட்டேல் பிரிவு மக்களிடம் செல்வாக்கு பெற்றவராக திகழும் இளம் தலைவர் ஹர்திக் பட்டேலின் பதிதார் அனமாத் அந்தோலன் சமிதி, சாதி அமைப்பு தலைவர்கள் அல்பேஷ் தாக்குர், ஜிக்னேஷ் மேவானி ஆகியோருடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் போட்டியிடுகிறது. இது அக்கட்சிக்கு சாதகமாக அமைந்து இருப்பதாக கூறப் படுகிறது.

    அதேநேரம் பா.ஜனதாவும் ஆட்சியை தக்க வைக்க வரிந்துகட்டிக் கொண்டு அனல்பறக்கும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டது. பிரதமர் மோடியின் சொந்த மாநிலம் என்பதால் பா.ஜனதா தலைவர்கள் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டனர். மோடியும் 34 இடங்களில் நடந்த பொதுக் கூட்டங்களில் பேசினார்.

    பா.ஜனதாவை வீழ்த்த பாகிஸ்தானுடன் சேர்ந்து காங்கிரஸ் சதி செய்கிறது என்றும், மணிசங்கர் அய்யர் தன்னை இழிபிறவி எனக் கூறியதை குற்றச்சாட்டாக வைத்தும் பிரதமர் மோடி 2-ம் கட்ட தேர்தல் பிரசாரம் மேற்கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் 2 கட்ட தேர்தல்களிலும் 68.41 சதவீத ஓட்டுகள் பதிவானது. கடந்த 2012-ம் ஆண்டு நடந்த தேர்தலில் 71.3 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தது.



    மாநில முதல்-மந்திரி விஜய் ரூபானி, துணை முதல்-மந்திரி நிதின் பட்டேல், மாநில பா.ஜனதா தலைவர் ஜிது வகானி மற்றும் மந்திரிகள், காங்கிரஸ் தலைவர்கள் சக்திசிங் கோகில், அர்ஜூன் மோத்வாடியா, சித்தார்த்த பட்டேல் மற்றும் அல்பேஷ் தாக்குர், ஜிக்னேஷ் மேவானி ஆகியோர் முக்கிய வேட்பாளர்கள் ஆவர்.

    மாநிலத்தில் ஆட்சி அமைக்க 92 உறுப்பினர்கள் ஆதரவு தேவை என்பது குறிப்பிடத்தக்கது. 2012-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவில் 115 பேரும், காங்கிரசில் 61 பேரும் வெற்றி பெற்று இருந்தனர்.

    68 உறுப்பினர்களைக் கொண்ட இமாசலபிரதேசத்துக்கு கடந்த நவம்பர் மாதம் 9-ந்தேதி தேர்தல் நடந்தது.

    ஆட்சியை தக்க வைக்க காங்கிரசும், 2007-ம் ஆண்டுக்கு பிறகு கைப்பற்ற பா.ஜனதாவும் கடும் போட்டியில் இறங்கின. சிறிய மாநிலம் என்றாலும் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் போட்டி போட்டு பிரசாரம் மேற்கொண்டனர். இங்கு நடந்த தேர்தலில் மொத்தம் 75.28 சதவீத ஓட்டுகள் பதிவானது. மாநிலத்தில் ஆட்சி அமைக்க 35 உறுப்பினர்கள் ஆதரவு தேவை. கடந்த தேர்தலில் காங்கிரசில் 36 பேரும், பா.ஜனதாவில் 26 பேரும் வெற்றி பெற்று இருந்தனர்.

    குஜராத் சட்டசபைக்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்ட பிறகே ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என்று அறிவிக் கப்பட்டு இருந்ததால் இங்கு இன்று (திங்கட்கிழமை) வாக்குகள் எண்ணப்படுகின்றன.

    முதல்-மந்திரி வீரபத்ரசிங், பா.ஜனதாவின் முதல்-மந்திரி வேட்பாளர் பிரேம்குமார் துமால் ஆகியோரின் அடுத்த 5 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையை இந்த தேர்தல் நிர்ணயிப்பதாக அமைந்துள்ளது.

    இரு மாநிலங்களிலும் இன்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்குகிறது. இதற்காக வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. ஒவ்வொரு மையத்திலும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    இன்று காலை 11 மணிக்குள் முன்னணி நிலவரம் முழுமையாக தெரிய வரும். அனைத்து முடிவுகளும் மாலை 5 மணிக்குள் தெரிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. குஜராத்தில் 37 மையங்களிலும், இமாசலபிரதேசத்தில் 42 மையங்களிலும் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.

    குஜராத் தேர்தல் 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான அரையிறுதி போட்டி போன்றது என்று வர்ணிக்கப்படுவதால் குஜராத் மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    குஜராத், இமாசலபிரதேசம் ஆகிய 2 மாநிலங்களிலும் தேர்தலுக்கு பின் வாக்காளர்களிடம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் பா.ஜனதாவே ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்பட்டு உள்ளது. அது எந்த அளவிற்கு உண்மை என்பது இன்று தெரிந்துவிடும்.

    இமாசலபிரதேச முதல்-மந்திரி வீரபத்ரசிங் கூறுகையில், “தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் எனக்கு நம்பிக்கை இல்லை. மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கைப்பற்றும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

    அதேநேரம் பா.ஜனதாவின் முதல்-மந்திரி வேட்பாளர் பிரேம்குமார் துமால், “கருத்துக் கணிப்பின்படியே தேர்தல் முடிவுகள் அமையும்” என்றார்.

    தேர்தல் முடிவுகள் எப்படி அமைந்தாலும் கட்சியின் தொண்டர்கள் அமைதி காக்கவேண்டும் என்று பா.ஜனதாவும், காங்கிரசும் தொண்டர் களை கேட்டுக்கொண்டு உள்ளன. 
    Next Story
    ×