search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குஜராத் தேர்தலில் பா.ஜனதா தோல்வி அடையும்: பா.ஜ.க. எம்.பி. பரபரப்பு தகவல்
    X

    குஜராத் தேர்தலில் பா.ஜனதா தோல்வி அடையும்: பா.ஜ.க. எம்.பி. பரபரப்பு தகவல்

    பாரதிய ஜனதா எம்.பி. ஒருவரே குஜராத்தில் தங்கள் கட்சி வெற்றிபெறாது என்று கூறி இருப்பது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    புனே:

    குஜராத் சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. நாளை (18-ந்தேதி) ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. தேர்தல் முடிந்த பிறகு பல அமைப்புகள் சார்பில் எடுக்கப்பட்ட கருத்து கணிப்பில் பா.ஜனதாவே வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் குஜராத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெறும் என்று மராட்டியத்தை சேர்ந்த பா.ஜனதா எம்.பி. சஞ்சய் காகடே கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் புனேயில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    குஜராத்தில் ஆட்சி அமைக்க போதுமான இடங்கள் பா.ஜனதாவுக்கு கிடைக்காது. காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை எட்டும் அளவுக்கு வெற்றிபெறும். எனது இந்த கணிப்பானது அந்த மாநிலத்தில் எடுக்கப்பட்ட கருத்து கணிப்பின் விளைவாகும்.

    நான் 6 பேர் அடங்கிய ஒரு குழுவை குஜராத்துக்கு அனுப்பி வைத்தேன். அவர்கள் மாநிலத்தின் பெரும்பாலான கிராமப்புற பகுதிகளுக்கு சென்று விவசாயிகள், டிரைவர்கள், தொழிலாளர்களிடம் கருத்து கேட்டனர். அவர்களிடம் எடுக்கப்பட்ட கணிப்பின் அடிப்படையிலேயே குஜராத்தில் பா.ஜனதாவுக்கு பெரும்பான்மை கிடைக்காது என்று கூறுகிறேன்.



    பா.ஜனதா 22 ஆண்டுகளாக குஜராத்தில் ஆட்சியில் உள்ளது. நாடு சுதந்திரம் பெற்றதில் இருந்து மேற்கு வங்காளத்தில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி 25 ஆண்டுகள் ஆட்சி நடத்தியதைபோல் வேறு எந்த மாநிலத்திலும் எந்தக் கட்சியும் தொடர்ந்து ஆட்சி நடத்தியதில்லை.

    குஜராத் தேர்தலில் எங்கள் கட்சிக்கு எதிரான எதிர்மறையான கருத்து எங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இறுதிகட்ட தேர்தல் பிரசாரத்தில் பா.ஜனதா தலைவர்கள் மாநிலத்தின் வளர்ச்சி குறித்து பேசவில்லை. அதற்கு பதிலாக காங்கிரசை விமர்சிப்பதிலும், உணர்ச்சி பொங்க வாக்காளர்களுக்கு கோரிக்கை வைப்பதிலுமே தீவிரமாக இருந்தனர்.

    இதையும்தாண்டி பா.ஜனதா வெற்றி பெற்றால் அதற்கு ஒரே காரணம் பிரதமர் நரேந்திர மோடிதான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பா.ஜனதா எம்.பி. ஒருவரே குஜராத்தில் தங்கள் கட்சி வெற்றிபெறாது என்று கூறி இருப்பது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×