search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியாவிடம் பாகிஸ்தான் மண்டியிட்ட நாள் இன்று - டெல்லி போர் தியாகிகள் நினைவிடத்தில் ராணுவ மந்திரி அஞ்சலி
    X

    இந்தியாவிடம் பாகிஸ்தான் மண்டியிட்ட நாள் இன்று - டெல்லி போர் தியாகிகள் நினைவிடத்தில் ராணுவ மந்திரி அஞ்சலி

    வங்காள தேசத்தின் விடுதலைக்காக 1971-ம் ஆண்டு இந்தியா நடத்திய போரில் பாகிஸ்தான் நம்மிடம் சரணாகதி அடைந்த நாளையொட்டி டெல்லி போர் தியாகிகள் நினைவிடத்தில் ராணுவ மந்திரி இன்று அஞ்சலி செலுத்தினார்.
    புதுடெல்லி:

    1970-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பாகிஸ்தானில் முதன்முறையாக நடைபெற்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலில் ஷேக் முஜிபுர் ரஹ்மான் தலைமையிலான அவாமி லீக் கட்சி அபார வெற்றி பெற்றது. பாகிஸ்தானின் பிரதமராக ஷேக் முஜிபுர் ரஹ்மான் பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மேற்கு பாகிஸ்தானின் பிரதான கட்சி தலைவராக இருந்த பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் துல் புகார் அலி பூட்டோ மற்றும் பாகிஸ்தானின் அந்நாள் ராணுவ ஆட்சிக்கு தலைமை தாங்கிய யஹ்யா கான் ஆகியோர் அவாமி லீக் கட்சியின் வெற்றியை அங்கீகரித்து ஏற்றுக்கொள்ள மறுத்தனர்.

    ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அவாமி லீக் கட்சிக்கு பாராளுமன்றத்தில் உரிய மதிப்பு அளிக்கப்படாததை எதிர்த்து கிழக்கு பாகிஸ்தானில் உள்ள மக்கள் ஒத்துழையாமை இயக்கத்தில் குதித்தனர். அவர்களது போராட்டத்தை ஆயுத பலத்தால் அடக்குமாறு தனது படைகளுக்கு ராணுவ தளபதி யஹ்யா கான் உத்தரவிட்டார். 

    ஈவிரக்கமற்ற வகையில் ராணுவம் போட்ட வெறியாட்டத்தில் கொத்துக்கொத்தாக மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். கொள்ளை, கற்பழிப்பு, பொது சொத்துகளை தீயிட்டு எரித்தல் போன்ற அரச வன்முறை கோரத் தாண்டவம் ஆடியது. இந்த அடக்குமுறையில் சுமார் 3 லட்சம் மக்கள் கொல்லப்பட்டனர். 4 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் ராணுவத்தினரால் கற்பழிக்கப்பட்டனர்.

    குழந்தைகளின் கண்கள் தோண்டி எடுக்கப்பட்டு, அவர்களின் விளா எலும்புகள் முறிக்கப்பட்டது. பெண்களின் மார்பகங்கள் அறுத்து எறியப்பட்டது.

    உயிர் பயத்தில் கிழக்கு பாகிஸ்தான் மக்கள் இந்தியாவில் அடைக்கலம் தேடி அகதிகளாக வர தொடங்கினர். குறுகிய காலத்துக்குள் இந்தியாவில் தஞ்சம் அடைந்த அகதிகளின் எண்ணிக்கை ஒரு கோடியாக உயர்ந்தது. முன்னர், பாகிஸ்தானின் பிரச்சனையாக இருந்தது, தற்போது இந்தியாவின் பிரச்சனையாக மாறி விட்டதாக அந்நாள் பிரதமர் இந்திரா காந்தி உணர்ந்தார்.

    1971-ம் ஆண்டு மே மாதவாக்கில் கிழக்கு பாகிஸ்தான் அகதிகள் இந்தியாவில் தங்கியிருந்த முகாம்களை இந்திரா பார்வையிட்டார். அங்கிருந்த மக்களின் பீதியடைந்த முகங்கள், அதிர்ச்சிக்குள்ளான மனநிலை, மற்றும் ராணுவ தாக்குதல்களில் தங்களது உறவினர்களை பறிகொடுத்தவர்களின் துயரக் கதைகளை கேட்ட அவர் பேச முடியாத நிலைக்கு ஆளானார்.

    பாகிஸ்தானின் இந்த ஊழித்தாண்டவத்தை இனியும் நாம் அனுமதிக்க முடியாது. இங்கு நடப்பது என்ன? என்பதையும், பாகிஸ்தானின் தீவிரவாதத்தையும் இந்த உலகம் அறிந்துகொள்ள வேண்டும். இதுதொடர்பாக, உலக நாடுகளின் மனசாட்சியை தட்டி எழுப்ப வேண்டும் என இந்திரா காந்தி தீர்மானித்தார்.

    3-12-1971 அன்று கொல்கத்தா நகரில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் இந்திரா காந்தி உரையாற்றி கொண்டிருந்தார். அப்போது, இந்தியாவின் மேற்கு பகுதியில் உள்ள விமானப் படை தளங்களின்மீது பாகிஸ்தான் போர் விமானங்கள் குண்டுகளை வீசிய தகவல் இந்திராவிடம் தெரிவிக்கப்பட்டது.

    அவர்கள் நம்மை தாக்கியதற்காக கடவுளுக்கு நன்றி என்று கூறிய இந்திரா காந்தி,  பாகிஸ்தான் மீது படை எடுக்குமாறு இந்திய படைகளுக்கு உத்தரவிட்டார். ராணுவ தளபதிகள் மானேக்‌ஷா, அவுரோரா தலைமையிலான படைகள் கிழக்கு பாகிஸ்தானுக்குள் நுழைந்தன.



    இந்திய படைகளின் வீரத்தையும், ஆற்றலையும் உலகுக்கு உணர்த்தி, அமெரிக்காவின் மூக்கை உடைத்ததுடன், பாகிஸ்தானையும் மண்டியிட வைத்தார். 16-12-1971 அன்று பாகிஸ்தான் படைகளை சேர்ந்த 90 ஆயிரம் வீரர்கள் இந்தியாவிடம் சரண் அடைந்தனர். பாகிஸ்தானில் இருந்து பிரித்து வங்காளதேசம் என்ற புதிய நாட்டை இந்தியா உருவாக்கி தந்தது.

    பாகிஸ்தானை இந்தியா வெற்றிகண்ட இந்நாள் போரில் தங்களது இன்னுயிரை நீத்த இந்தியா ராணுவத்தின் முப்படைகளை சேர்ந்த மாவீரர்களின் வீர, தீரத்தையும் தியாகத்தையும் போற்றும் வகையில் ஆண்டுதோறும் ‘விஜய் திவாஸ்’ என்ற பெயரில் நினைவுகூரப்படுகிறது.

    அவ்வகையில், இந்தியா - பாகிஸ்தான் போரை நினைவுகூரும் வகையில் டெல்லியில் உள்ள அமர் ஜவான் ஜோதி (தியாகிகள் நினைவிடம்) பகுதிக்கு இன்று சென்ற ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் மலர் வளையம் வைத்து வீர அஞ்சலி செலுத்தினார்.

    இந்திய வீரர்களின் சேவையையும், தியாகத்தையும் வியந்து ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்படுவதாக தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

    இதேபோல், ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் ‘இந்தியாவின் சுதந்திரத்தை ஒவ்வொரு நாளும் பாதுகாக்கும் நமது வீரர்களின் தீரத்தை நினைவுகூருவோம்’ என தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×