search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சபரிமலையில் அலைமோதும் அய்யப்ப பக்தர்கள் கூட்டம்.
    X
    சபரிமலையில் அலைமோதும் அய்யப்ப பக்தர்கள் கூட்டம்.

    நடை திறந்த 30 நாளில் சபரிமலை கோவிலுக்கு ரூ.119 கோடி வருமானம்

    சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவில் நடை திறந்த 30 நாளில் மொத்தம் ரூ.118 கோடியே 92 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது.
    திருவனந்தபுரம்:

    சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக கடந்த மாதம் 15-ந்தேதி நடை திறக்கப்பட்டது. வருகிற 26-ந்தேதி பிரசித்திபெற்ற மண்டல பூஜை நடைபெறுகிறது.

    நடைதிறந்த நாளில் இருந்து சபரிமலையில் அதிக கூட்டம் காணப்படுகிறது. இருமுடி கட்டு சுமந்து சரண கோ‌ஷம் முழங்க அய்யப்ப பக்தர்கள் சபரிமலையில் குவிந்தவண்ணம் உள்ளனர். தமிழக, ஆந்திர, கர்நாடக பக்தர்கள் அதிகளவு வருகை தருகிறார்கள்.

    பக்தர்கள் வருகை அதிகரித்ததை தொடர்ந்து சபரிமலை கோவில் வருமானமும் இந்த ஆண்டு அதிகமாக கிடைத்துள்ளது. நடை திறந்த 30 நாளில் மொத்தம் ரூ.118 கோடியே 92 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு ரூ.103 கோடியே 54 லட்சம் வருமானம் கிடைத்திருந்தது. இந்த ஆண்டு கூடுதலாக ரூ.15 கோடி கிடைத்துள்ளது.

    அரவணை பிரசாதம் விற்பனை மூலம் ரூ.52 கோடியே 22 லட்சமும், அப்பம் விற்பனை மூலம் ரூ.9 கோடியே 16 லட்சமும் கிடைத்துள்ளது.

    சபரிமலை பக்தர்கள் வசதிக்காக அங்கு ரோப் கார் திட்டத்தை செயல்படுத்த திருவிதாங்கூர் தேவசம் போர்டு திட்டமிட்டு உள்ளது. ஆனால் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் மலை வழி பாதையில் பெரும்பாலான இடங்கள் கேரள வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. வனத்துறை எதிர்ப்பு காரணமாக ரோப்கார் திட்டத்தை உடனடியாக தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
    Next Story
    ×