search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பதியில் தரிசனம் செய்ய 18-ந்தேதி முதல் ஆதார் அட்டை கட்டாயம்
    X

    திருப்பதியில் தரிசனம் செய்ய 18-ந்தேதி முதல் ஆதார் அட்டை கட்டாயம்

    திருப்பதியில் இலவச தரிசனத்தில் செல்லும் பக்தர்களுக்கு (டைம் ஸ்லாட் முறை) தரிசன அட்டை 18-ந்தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது. ஆதார் அட்டை கொண்டு வரும் பக்தர்களுக்கே டைம் ஸ்லாட் முறை தரிசன அட்டை வழங்கப்படும்.

    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.

    இலவச தரிசனத்தில் செல்லும் பக்தர்கள் குடோன்களில் தங்க வைக்கப்படுகின்றனர். குறைந்தபட்சம் 4 மணி நேரம் முதல் அதிகபட்சம் 12 மணி நேரம் வரை அவர்கள் குடோன்களில் தங்க வைக்கபடுகின்றனர்.

    இதையடுத்து இலவச தரிசனத்தில் செல்லும் பக்தர்களுக்கு தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட (டைம் ஸ்லாட் முறை) தரிசன அட்டை வருகிற 18-ந்தேதியில் இருந்து அமல்படுத்தப்பட உள்ளது. இதன்மூலம் குடோன்களில் தங்காமல் குறிப்பிட்ட நேரத்தில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம்.

    இந்த நிலையில் டைம் ஸ்லாட் முறை அமல்படுத்தப்படுவது குறித்த ஆலோசனை கூட்டம் திருமலையில் உள்ள சேஷாபவனத்தில் நடந்தது. திருமலை-திருப்பதி தேவஸ்தான துணை அதிகாரி சீனிவாசராஜூ தலைமை தாங்கி பேசினார். இதில் அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    டைம் ஸ்லாட் முறை அறிமுகப்படுத்தப்படுவதால் பக்தர்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டியதில்லை. குறிப்பிட்ட நேரத்தில் உடனடியாக தரிசனம் செய்யலாம். வருகிற 18-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை சோதனைமுறையில் நடத்தப்படுகிறது. இது வெற்றி பெற்றால் தொடர்ந்து டைம் ஸ்லாட் முறை பின்பற்றப்படும்.

    பக்தர்களுக்கு எவ்வாறு டோக்கன் வழங்குவது என்பது உள்பட பல்வேறு பயிற்சிகள் இங்கு அளிக்கப்படும். இந்த டைம் ஸ்லாட் டோக்கன் பெற, அலிபிரி அருகே காளிகோபுரத்தில் 12 கவுண்ட்டர்கள், ஸ்ரீவாரிமெட்டு நடைபாதையில் 4 கவுண்ட்டர்கள் உள்பட 14 இடங்களில் 117 கவுண்ட்டர்கள் அமைக்கப்படுகின்றன.

    இங்கு காலை 6 மணி முதல் பகல் 2 மணி வரையும், பகல் 3 மணி முதல் இரவு 10 மணி வரையும், இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரையும் பக்தர்களுக்கு டோக்கன் வழங்கப்படும். இந்த டோக்கன் பெற ஆதார் அட்டையை கட்டாயம் காண்பிக்க வேண்டும்.

    ஆதார் அட்டை கொண்டு வரும் பக்தர்களுக்கே டைம் ஸ்லாட் முறை தரிசன அட்டை வழங்கப்படும். இலவச தரிசனத்தில் செல்லும் பக்தர்கள் வேறு எந்த ஆவணங்களை கொண்டு வந்தாலும் ஏற்கப்பட மாட்டாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×