search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒப்புகைச் சீட்டை சரிபார்க்க குஜராத் காங்கிரஸ் வலியுறுத்தல்: மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
    X

    ஒப்புகைச் சீட்டை சரிபார்க்க குஜராத் காங்கிரஸ் வலியுறுத்தல்: மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

    ஒப்புகைச் சீட்டையும், வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகளையும் சரிபார்க்கக் கோரி காங்கிரஸ் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் தேர்தல்களில் வாக்குச்சீட்டு முறை நீக்கப்பட்டு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த எந்திரத்தில் தில்லுமுல்லு செய்ய முடியும் என பல்வேறு தரப்பினரும் புகார் கூறி வருகின்றனர். எனவே, வாக்களிக்கும்போது யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்துகொள்ளும் வகையிலான, ஒப்புகைச் சீட்டு வழங்கும் வகையில், வாக்காளர் சரிபார்ப்பு காகிதப்பதிவு எந்திரம் (விவிபிஏடி) அறிமுகம் செய்யப்பட்டது. இதை வைத்து வாக்காளர்கள் வேண்டுமானால் அறிந்துகொள்ளலாம். அதன் மீது மக்களுக்கு நம்பிக்கை வர வேண்டும் என்றால் இரண்டையும் சரிபார்க்க வேண்டும்.

    அதாவது, வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகளும், விவிபிஏடி எந்திரத்தில் பதிவான சின்னங்களின் எண்ணிக்கையும் ஒத்துப்போகிறதா? என்பதை சரிபார்க்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். 

    இந்நிலையில், குஜராத் சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், இந்த பிரச்சினையை காங்கிரஸ் கையில் எடுத்துள்ளது. இதற்காக உச்ச நீதிமன்றத்தில் குஜராத் மாநில காங்கிரஸ் கமிட்டி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கையின்போது குறைந்தது 25 சதவீத விவிபிஏடி பேப்பர்களையும், அதனுடன் இணைந்த வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகளையும் சரிபார்க்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடும்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது காங்கிரசின் மனுவை ஆய்வு செய்த உச்ச நீதிமன்றம், இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று கூறி தள்ளுபடி செய்தது. அத்துடன், குஜராத் காங்கிரஸ் தரப்பில் தேர்தல் சீர்திருத்தங்களுக்காக உச்ச நீதிமன்றத்தில் தனியாக மனு தாக்கல் செய்யலாம் என தெரிவித்தது.
    Next Story
    ×