search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மண்எண்ணெய் மானியம் 2020-ம் ஆண்டு முதல் ரத்து: மத்திய அரசு முடிவு
    X

    மண்எண்ணெய் மானியம் 2020-ம் ஆண்டு முதல் ரத்து: மத்திய அரசு முடிவு

    மண்எண்ணெய்க்கு வழங்கப்படும் மானியத்தை வருகிற 2020-ம் ஆண்டு முதல் முழுவதும் ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
    புதுடெல்லி: 

    நாட்டில் மண்எண்ணெயை எரிபொருளாக பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தற்போது குறைந்து வருகிறது. 

    சமையல் எரிவாயு பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதே அதற்கு காரணமாகும். 

    அதே நேரத்தில் மண்எண்ணெய்க்கு வழங்கப்பட்டு வந்த மானியம் படிப்படியாக குறைக்கப்பட்டதும் முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இந்த நிலையில் இன்னும் 2 ஆண்டுகளில் மண்எண்ணெய்க்கு வழங்கப்படும் மானியத்தை வருகிற 2020-ம் ஆண்டு முதல் முழுவதும் ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

    அதற்காக பிரதமர் உஜ்வாலா யோஜனா திட்டம் மூலமும், சவுபாக்யா திட்டம் மூலமும் 100 சதவீதம் மக்களுக்கும் சமையல் எரிவாயு இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. 


    அதற்காக தினசரி மண்எண்ணெய் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை பெருமளவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    மண்எண்ணெய்க்கு மட்டும் கடந்த 2016-17-ம் ஆண்டில் ரூ.7.595 கோடி மானியம் வழங்கப்பட்டது. இந்த ஆண்டில் அது ரூ.4.500 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 40 சதவீதம் குறைவு என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

    இதே நிலையை படிப்படியாக பின்பற்றி வருகிற 2020-ம் ஆண்டில் மண்எண்ணெய்க்கான மானியம் முழுவதையும் ரத்து செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 

    அதற்கு முன்னோடியாக சில மாநிலங்களுக்கான மண்எண்ணெய் ஒதுக்கீடு அளவு குறைக்கப்பட்டுள்ளது. மேலும் மண்எண்ணெய் சப்ளை வேண்டாம் என்றும் சில மாநிலங்கள் ஒதுக்கீட்டை சரண்டர் செய்து விட்டன. 

    ஆந்திர பிரதேசம், சண்டிகார், டெல்லி, டாமன் மற்றும் டையூ, அரியானா, லட்சத்தீவுகள், புதுச்சேரி மற்றும் பஞ்சாப் மாநிலங்கள் அதில் அடங்கும். பொதுவாக நாட்டில் உள்ள கிராமப் புறங்களில் சமையல் எரிவாயு பயன்படுத்துவோரின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. 

    அதனால் மண்எண்ணெய் உபயோகிப்போரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இது ஒரு நல்ல தொடக்கம் என பெட்ரோலிய அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
    Next Story
    ×