search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஷ்மீர்: பனிச்சரிவில் சிக்கிய 3 ராணுவ வீரர்கள் உயிருடன் மீட்பு
    X

    காஷ்மீர்: பனிச்சரிவில் சிக்கிய 3 ராணுவ வீரர்கள் உயிருடன் மீட்பு

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பனிச்சரிவில் சிக்கிய 5 ராணுவ வீரர்களில் 3 பேர் உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

    ஜம்மு:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குப்வாரா மற்றும் பந்திபோரா மாவட்டங்களில் கடும் பனிச்சரிவு ஏற்பட்டது. பந்திபோரா மாவட்டம் பாக்தோர் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் எல்லை கோட்டுப்பகுதியில் உள்ள ராணுவ முகாம் பாதிக்கப்பட்டது. அங்கிருந்த 3 ராணுவ வீரர்கள் பனியில் சிக்கினர். குப்வாரா மாவட்டத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு ராணுவ வீரர்கள் மலையிலிருந்து தவறி விழுந்தனர்.

    அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மூன்றாம் நாளான இன்று தேடும் பணியில் பல மீட்புப்படையினர் ஈடுபட்டனர். தொடர்ச்சியாக கடுமையான பனிபொழிவு இருந்த போதிலும் வீரர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. 



    இதனை தொடர்ந்து தேடுதல் மற்றும் மீட்பு பணியில் ராணுவ குழு மற்றும் போலீசார் ஈடுபட்டனர்.  அவர்களுடன் இந்திய விமான படை ஹெலிகாப்டர் ஒன்றும் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டது.

    இந்த நிலையில் பனிச்சரிவில் சிக்கி காணாமல் போன 3 பேரும் கலோ பகுதியில் இருந்து மீட்கப்பட்டு உள்ளனர். அதன்பின்னர் கத்துவா மாவட்டத்திற்கு அவர்கள் கொண்டு செல்லப்பட்டனர். இருப்பினும் ரோந்துப்பணியின் போது தவறி விழுந்து காணாமல் போன இருவர் இன்னும் மீட்கப்படவில்லை. காணாமல் போய் மூன்று நாள் ஆகியிருப்பதால் அவர்கள் உயிருடன் இருக்க குறைந்த வாய்ப்புகளே இருப்பதாக கூறப்படுகிறது.
    Next Story
    ×