search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்க ராஜஸ்தான் அரசு திட்டம்
    X

    சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்க ராஜஸ்தான் அரசு திட்டம்

    சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு மத்தியப்பிரதேசத்தில் உள்ளதுபோன்று மரண தண்டனை விதிக்க ராஜஸ்தான் அரசு திட்டமிட்டுள்ளது.

    ஜெய்ப்பூர்:

    நாடு முழுவதும் கடந்த சில ஆண்டுகளாக சிறுமிகள் தொடர்ந்து பாலியல் வன்முறைக்கு ஆளாகி வருகின்றனர். தனியாக செல்லும் சிறுமிகள் மற்றும் பெண்களைக் குறிவைத்து இதுபோன்ற வன்முறைகள் அதிகமாக நடந்து வருகின்றன. 

    பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கும் குற்றவாளிகள் சிறிது காலத்தில் வெளியே வந்துவிடுகின்றனர். எனவே, பாலியல் வன்முறையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டால் தான் இதுபோன்ற குற்றங்கள் குறையும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.



    இதையடுத்து, சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டத்திருத்ததுக்கு மத்தியப்பிரதேச அமைச்சரவை கடந்த மாதம் ஒப்புதல் அளித்தது. அதைத்தொடர்ந்து கடந்த 4-ம் தேதி அதற்கான மசோதா அம்மாநில சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்துக்கு அனைத்து தரப்பினரும் வரவேற்பு தெரிவித்தனர்.

    இந்நிலையில், மத்தியப்பிரதேச மாநிலத்தை தொடர்ந்து ராஜஸ்தானிலும் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்க அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது. இதற்காக மத்தியப்பிரதேசத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை ஆராய்ந்து வருவதாக ராஜஸ்தான் மாநில உள்துறை மந்திரி குலாப் சந்த் கடாரியா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், ‘மத்தியப்பிரதேசத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை ஆராய்ந்து வருகிறோம். அந்த மசோதா ஜனாதிபதி ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. அதற்கு ஒப்புதல் அளிக்கப்படும் பட்சத்தில் அதே மசோதா ராஜஸ்தான் சட்டமன்றத்திலும் தாக்கல் செய்யப்படும்’, என கூறினார்.
    Next Story
    ×