search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாக்களித்த பின்னர் பிரதமர் மோடி வீதியில் ஊர்வலம் செல்வதா?: காங். குற்றச்சாட்டு
    X

    வாக்களித்த பின்னர் பிரதமர் மோடி வீதியில் ஊர்வலம் செல்வதா?: காங். குற்றச்சாட்டு

    குஜராத் தேர்தலில் வாக்களித்த பின்னர் பிரதமர் மோடி வீதியில் ஊர்வலம் சென்றது தேர்தல் விதிமுறைகளை மீறிய செயல் என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
    புதுடெல்லி:

    182 உறுப்பினர்களை கொண்ட குஜராத் சட்டசபைக்கு டிசம்பர் 9, 14-ம் தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி 89 தொகுதிகளுக்கு முதல் கட்ட தேர்தல் கடந்த 9-ம் தேதி நடந்தது. அதில் சுமார் 68 சதவீதம் வாக்குகள் பதிவானது.   

    இந்த நிலையில் எஞ்சிய 93 தொகுதிகளுக்கு இரண்டாம் மற்றும் இறுதிக்கட்டமாக தேர்தல் இன்று தேர்தல் துவங்கி நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியதும் மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.
     
    பிரதமர் மோடியின் சொந்த மாநிலம், குஜராத் என்பதால் பிரதமர் மோடி இன்று வாக்களிக்க குஜராத் வருகை தந்தார். அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ரனிப் என்ற இடத்தில் உள்ள 115-ம் எண் வாக்குச்சாவடியில் பிரதமர் மோடி வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்தார். வாக்களிக்க வருகை தந்திருந்த மோடி, சக வாக்காளர்களிடம் மிகவும் சகஜமாக  பேசிக்கொண்டு இருந்தார்.

    பிரதமர் மோடியை பார்த்ததும் அங்குள்ள வாக்காளர்கள் உற்சாகமாக அவரைப்பார்த்து மோடி மோடி என்று கோஷம் எழுப்பினர்.
    வாக்களித்து முடித்த பின்னர் அந்த வீதியில் சில அடி தூரம் அவர் நடந்து சென்று சுற்றி நின்றவர்களை பார்த்து கையசைத்தார்.

    இந்நிலையில், வாக்குச்சாவடியில் ஓட்டு கேட்பது போல பிரதமர் மோடி செயல்படுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக பேசிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப், “தேர்தல் ஆணையம் பா.ஜ.க.வுக்கு ஒரு மாதிரியும், காங்கிரஸ் கட்சிக்கு ஒரு மாதிரியும் செயல்படுகிறது. டெல்லியில் ராகுல் காந்தி தொலைக்காட்சியில் பேட்டி கொடுத்தது குஜராத்தில் ஒளிபரப்பப்பட்டது. அதற்கு தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்கிறது. ஆனால், மோடி இன்று விதிகளை புறம்தள்ளி வீதியில் பிரச்சாரம் செய்வது போல் ஊர்வலம் செல்கிறார்” என்று கூறியுள்ளார்.

    குஜராத் மாநிலத்தில் மோடி முதல்வராக இருந்த போது, அவரது செயலாளராக தற்போதைய தலைமை தேர்தல் ஆணையர் ஜோஷி பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×