search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பூந்துறையில் மீனவ பெண்களுக்கு ஆறுதல் கூறும் ராகுல்காந்தி.
    X
    பூந்துறையில் மீனவ பெண்களுக்கு ஆறுதல் கூறும் ராகுல்காந்தி.

    மீன்வளத்துறைக்கு தனி அமைச்சகம் உருவாக்க வேண்டும்: கேரள மீனவர்கள் மத்தியில் ராகுல்காந்தி பேச்சு

    விவசாயத்துறைக்கு தனி அமைச்சகம் இருப்பது போல மீன்வளத்துறைக்கும் தனி அமைச்சகம் உருவாக்க வேண்டும் என்று கேரள மீனவர்கள் மத்தியில் ராகுல்காந்தி பேசினார்.

    திருவனந்தபுரம்:

    குமரி மாவட்டத்தில் கடந்த 30-ந்தேதி வீசிய ஒக்கி புயல் குமரி மாவட்ட எல்லையில் உள்ள கேரள கடற்கரை கிராமங்களிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

    கேரள கடலில் மீன்பிடிக்க சென்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் ஒக்கி புயலில் சிக்கி மாயமானார்கள். இதில் 100-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

    இதுவரை 66 மீனவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இவர்களின் குடும்பத்தாருக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் ஆறுதல் கூறி வருகிறார்கள்.

    அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பு ஏற்க உள்ள ராகுல்காந்தி இன்று கேரளா சென்றார். அங்கு ஒக்கி புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட பூந்துறை கிராமத்திற்கு பகல் 12.05 மணிக்கு சென்றார்.

    பூந்துறையில் ஏராளமான மீனவர்கள் மற்றும் புயலில் பலியானவர்களின் உறவினர் கள் கூடி இருந்தனர். அவர்கள் மத்தியில் ராகுல்காந்தி பேசியதாவது:-

    கேரளாவில் ஒக்கி புயல் தாக்கியதும் உடனே வந்து உங்களை சந்திக்க விரும்பினேன். அப்போது குஜராத் தேர்தல் பிரசார களத்தில் இருந்ததால், அங்கிருந்து உடனடியாக வர முடியவில்லை. அதற்காக உங்களிடம் மன்னிப்பு கோருகிறேன்.

    எனது உடல் குஜராத் தேர்தல் களத்தில் இருந்தாலும், உயிரும், உணர்வும் உங்களைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தது. இதனால் பிரசாரம் முடிந்ததும் உங்களை பார்க்க ஓடி வந்தேன்.

    ஒக்கி புயல் மீனவர்கள், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை புரட்டிப்போட்டு விட்டது. குறிப்பாக மீனவர் குடும்பங்கள் பலரும் கணவரை இழந்துள்ளனர். பலர் தங்களின் மகனை, உறவினர்களை பறி கொடுத்துள்ளனர். அவர்களின் இழப்பு ஈடு செய்ய முடியாதது.

    இதற்கு நிவாரணம் வழங்கினால் மட்டும் போதாது. சொந்தங்களை பறி கொடுத்த மீனவர்களின் மறுவாழ்வுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்கு மத்திய, மாநில அரசுகள் பெரும் முயற்சி செய்ய வேண்டும்.

    இனியும் இதுபோன்ற பேரிடர்கள் ஏற்படாமல் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை நாம், நவீனப்படுத்த வேண்டும். புயலில் விவசாய விளைநிலங்களும் சேதமாகி உள்ளது. அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.

    பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும், நான் ஆதரவாக இருப்பேன். மத்தியில் விவசாயத்துறைக்கு தனி அமைச்சகம் இருப்பது போல மீன்வளத்துறைக்கும் தனி அமைச்சகம் உருவாக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பூந்துறையில் மீனவர்களுக்கு ஆறுதல் கூறிய பின்பு ராகுல்காந்தி குமரி மாவட்ட எல்லையில் உள்ள விழிஞ்ஞம் கடற்கரை கிராமத்திற்கு சென்றார். அங்கும் மீனவர் குடும்பங்களைச் சந்தித்து பேசினார். இதையடுத்து மீண்டும் திருவனந்தபுரம் சென்றார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் குமரி மாவட்டத்தில் உள்ள தூத்தூர் கடற்கரை கிராமத்திற்கு பிற்பகல் வருகிறார்.


    Next Story
    ×