search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரா போலீஸ்காரர்களுக்கு கிருஷ்ணர் படத்துடன் ‘பேட்ஜ்’: உ.பி. அரசு அறிவிப்பு
    X

    மதுரா போலீஸ்காரர்களுக்கு கிருஷ்ணர் படத்துடன் ‘பேட்ஜ்’: உ.பி. அரசு அறிவிப்பு

    உத்தர பிரதேசத்தில் மதுரா சுற்றுலா படை போலீஸ்காரர்களின் சீருடையில் கிருஷ்ணர் படம் பதித்த பேட்ஜ் அணிய அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
    ஆக்ரா:

    உத்தரபிரதேச மாநிலம் மதுரா கிருஷ்ணர் அவதரித்த, புனித புண்ணிய தலமாகும். டெல்லியில் இருந்து ஆக்ராவுக்கு செல்லும் வழித்தடத்தில் மதுரா அமைந்துள்ளது.

    மதுராவும், மதுராவை சுற்றியுள்ள கோகுலளீ, பிருந்தாவனம், கோவர்த்தனம் ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டு “கிருஷ்ண ஜென்ம பூமி”யாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த பகுதியை புனித்தலமாக உத்தரபிரதேச மாநில அரசு அறிவித்தது.

    இதைத் தொடர்ந்து அந்த புனித பகுதிக்கு என போலீஸ் படை உருவாக்கப்பட உள்ளது. அந்த போலீஸ் படைக்கு சுற்றுலா போலீஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது.

    அந்த தனிப்படை போலீசார் சீருடையில் கிருஷ்ணர் பேட்ஜ் இடம் பெற்றிருக்கும். மதுராவுக்கு வரும் கிருஷ்ண பக்தர்களுக்கும், வெளிநாட்டு பக்தர்களுக்கும் உதவும் பணிகளில் அந்த போலீசார் ஈடுபடுவார்கள்.

    இதுபற்றி உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே நல்லுறவு மேம்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக கூறினார். எனவேதான் போலீசாரின சீருடையில் கிருஷ்ணர் படத்தை இடம் பெற செய்வதாக அவர் குறிப்பிட்டார்.

    ஆனால் போலீசார் சீருடையில் இந்து மத கடவுளை இடம் பெற செய்வதற்கு எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. இது மதவாதத்தை தூண்டுவதாக அமையும் என்று ஒரு சாரார் கூறியுள்ளனர்.

    உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இஸ்லாமிய அமைப்பினரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறுகையில், இந்தியா மதசார்பற்ற நாடு. அப்படி இருக்கையில் போலீசார் சீருடையில் இந்து மத கடவுளை இடம் பெற செய்வது பொருத்தமாக இருக்காது என்று கூறியுள்ளனர்.

    இதனால் உத்தரபிரதேச அரசின் இந்த நடவடிக்கை சர்ச்சைக்குரியதாக மாறி உள்ளது.
    Next Story
    ×