search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமர் பாலம் தொடர்பான ஆய்வு பா.ஜ.க.வின் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளது - ரவிசங்கர் பிரசாத்
    X

    ராமர் பாலம் தொடர்பான ஆய்வு பா.ஜ.க.வின் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளது - ரவிசங்கர் பிரசாத்

    ராமேஸ்வரம் பகுதியில் கடலுக்கு அடியில் அமைந்துள்ள ராமர் பாலம் தொடர்பான அமெரிக்காவின் ஆய்வு முடிவு பா.ஜ.க.வின் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளதாக மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் குறிப்பிட்டுள்ளார்.
    புதுடெல்லி:

    ராமேஸ்வரம் அருகே உள்ள பாம்பனில் இருந்து இலங்கையில் உள்ள தலைமன்னார்வரை கடலுக்கு அடியில் 50 கி.மீ. தூரத்துக்கு ராமர் பாலம் அமைந்துள்ளது. ராமாயண காலத்தில், இலங்கையில் சிறை வைக்கப்பட்டிருந்த சீதையை மீட்க சென்ற ராமருக்காக வானர சேனைகள் அந்த பாலத்தை கட்டியதாக நம்பப்படுகிறது. அதனால், அதை இந்துக்கள் புனிதமாக கருதுகிறார்கள்.

    ஆனால், ராமர் பாலம் என்பது வெறும் கட்டுக்கதை என்று மற்றொரு சாரார் கூறுகிறார்கள். கடலுக்கு அடியில் இயற்கையாக அமைந்த மணல் திட்டுகளே அவை என்று அவர்கள் கூறுகிறார்கள்.

    கடந்த 2005-ம் ஆண்டு, இந்தியா-இலங்கை இடையிலான கடல் பகுதியை சரக்கு கப்பல் போக்குவரத்துக்காக ஆழப்படுத்த சேது சமுத்திர திட்டம் தொடங்கப்பட்டது.

    ஆனால், அத்திட்டத்தின் வழித்தடம், ராமர் பாலத்தை சேதப்படுத்தும் வகையில் இருந்ததால், அதற்கு எதிர்ப்பு எழுந்தது. இவ்விவகாரம் குறித்த வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இம்மாத இறுதியில் மத்திய அரசு தனது பிரமாண மனுவை தாக்கல் செய்ய உள்ளது.

    இந்நிலையில், ராமர் பாலம் கட்டுக்கதை அல்ல, அது மனிதர்களால் உருவாக்கப்பட்டதுதான் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அமெரிக்காவில், இந்தியானா பல்கலைக்கழகம், தெற்கு ஓரிகன் பல்கலைக்கழகம், கொலராடோ பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இதை கண்டறிந்துள்ளனர்.

    ராமர் பாலம் அமைந்துள்ள இடத்தில் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படங்கள் உள்ளிட்ட ஆய்வுகளை வைத்து அவர்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.

    இந்நிலையில், ராமர் பாலம் தொடர்பான அமெரிக்காவின் ஆய்வு முடிவுகள் பா.ஜ.க.வின் நீண்டகால நிலைப்பாட்டை தற்போது உறுதிப்படுத்தியுள்ளதாக மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் குறிப்பிட்டுள்ளார்.

    ராமர் பாலம் இயற்கையாக தோன்றிய அமைப்பு அல்ல, மனிதர்களால் உருவாக்கப்பட்டது என்பதை தற்போது அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இது பா.ஜ.க. காலகாலமாக நம்பிவரும் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், ராமாயணத்தில் சீதையை மீட்பதற்காக ராமரால் கட்டப்பட்டதுதான் ராமர் பாலம் என்ற நம்பிக்கையை கேள்விக்குறியாக்கும் வகையில் சுப்ரீம் கோர்ட்டில் முன்னர் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தற்போது என்ன சொல்லப் போகிறது? எனவும் ரவி சங்கர பிரசாத் கேள்வி எழுப்பியுள்ளார்.

    Next Story
    ×