search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரளாவை உலுக்கிய ஷிஜா கொலை வழக்கு: கைதான அசாம் வாலிபர் குற்றவாளி என தீர்ப்பு
    X

    கேரளாவை உலுக்கிய ஷிஜா கொலை வழக்கு: கைதான அசாம் வாலிபர் குற்றவாளி என தீர்ப்பு

    கேரள மாநிலம் சட்டக்கல்லூரி மாணவி ஷிஜா கொலை வழக்கில் கைதான அசாம் வாலிபர் அமீருல் இஸ்லாமை குற்றவாளி என எர்ணாகுளம் மாவட்ட நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொச்சி அருகே பெரும்பாவூர் பகுதியைச் சேர்ந்தவர் சட்டக்கல்லூரி மாணவி ஷிஜா (30). இவர், கடந்த ஏப்ரல் மாதம் 28-ம் தேதி தனது வீட்டில் வைத்து கொடூரமான முறையில் கற்பழித்து கொலை செய்யப்பட்டார். கேரள மாநிலம் முழுவதும் இந்த கொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    மேலும் அப்போது நடந்த கேரள சட்டசபை தேர்தலிலும் இந்த கொலை முக்கிய பிரச்சினையாக எடுத்து பிரசாரம் செய்யப்பட்டது. தேர்தலுக்கு பிறகு கம்யூனிஸ்டு ஆட்சி பினராய் விஜயன் தலைமையில் அமைந்தது.

    மாணவி ஷிஜா கொலை வழக்கை விசாரிக்க ஏ.டி.ஜி.பி. சந்தியா தலைமையில் தனிப்படை அமைத்து பினராய் விஜயன் நடவடிக்கை எடுத்தார். ஏ.டி.ஜி.பி. சந்தியா திறமையாக துப்பு துலக்கி இந்த கொலையில் தொடர்புடைய அசாம் மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் அமீருல் இஸ்லாம் என்பவரை கைது செய்தார்.

    மாணவி ஷிஜாவை கிண்டல் செய்ததால் அமீருல் இஸ்லாமை அவர் செருப்பால் அடித்ததாகவும், அந்த ஆத்திரத்தில் இந்த கொலையில் அமீருல் இஸ்லாம் ஈடுபட்டதும் விசாரணையில் தெரிய வந்தது.

    இதை தொடர்ந்து அமீருல் இஸ்லாம் கைது செய்யப்பட்டு கொச்சி ஜெயிலில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் இந்த கொலை வழக்கு எர்ணாகுளம் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

    இந்நிலையில், ஓராண்டாக நடந்த இந்த வழக்கு விசாரணையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. கொலை செய்ததாக கூறப்படும் அமீருல் இஸ்லாம், கொலை செய்ததற்கான ஆதாரங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவர் குற்றவாளி என நீதிபதி தீர்ப்பளித்தார். இவருக்கான தண்டனை விபரங்கள் நாளை அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×