search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சபரிமலையில் அலைமோதும் கூட்டம்: 16 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்
    X

    சபரிமலையில் அலைமோதும் கூட்டம்: 16 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுவதால் பதினாறு மணிநேரம் காத்திருப்புக்கு பிறகு சாமி தரிசனம் செய்ய முடிந்தது.
    திருவனந்தபுரம்:

    சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் கடந்த மாதம் 15-ந்தேதி மண்டல பூஜைக்காக கோவில் நடை திறக்கப்பட்டது. இந்த ஆண்டு முதல் நாளில் இருந்தே சபரி மலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

    தமிழகம், கர்நாடகா, ஆந்திராவை சேர்ந்த பக்தர்கள் அதிகளவு சபரிமலையில் குவிந்தவண்ணம் உள்ளனர். சபரிமலையில் சில நாட்கள் கனமழை பெய்ததால் பக்தர்கள் கூட்டம் சற்று குறைந்தது. தற்போது மீண்டும் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

    நேற்றும் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது. இதனால் 16 மணிநேரம் காத்திருந்தபிறகுதான் பக்தர்களால் சாமிதரிசனம் செய்ய முடிந்தது. பம்பையில் இருந்தே பக்தர்களை கட்டுப்படுத்தி வரிசையில் அனுப்பும் நிலை ஏற்பட்டது. இதனால் போலீசார் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள்.

    பத்தனம்திட்டா அருகே கோட்டூர் பகுதியில் அடர்ந்த காடுகள் அதிகம் உள்ளது. இங்கு முண்டோனி பகுதியில் ஆதிவாசிகள் அதிகளவு வசித்து வருகிறார்கள். இவர்களது குலதெய்வம் சுவாமி அய்யப்பன் ஆகும். தங்கள் குருசாமியாக அகத்திய முனிவரை இவர்கள் ஏற்றுக் கொண்டவர்கள். இவர்கள் கிராமத்தை சேர்ந்தவர்கள் பாதயாத்திரையாக சபரிமலை வந்து மண்டல பூஜையின் போது சுவாமி அய்யப்பனை தரிசனம் செய்வது வழக்கம்.

    நேற்று இந்த ஆதிவாசிகள் கிராமத்தை சேர்ந்த 22 குழந்தைகள், 7 பெண்கள் உள்பட 97 பேர் சபரிமலைக்கு வந்தனர். அவர்கள் மலைத் தேன், காட்டுப்பூக்கள், பழங்களுடன் வருகை தந்தனர். அவர்களை போலீசாரும், அதிகாரிகளும் வரவேற்று அழைத்துச் சென்று சாமி தரிசனத்திற்கு ஏற்பாடு செய்தனர். இவர்கள் வரிசையில் காத்திருக்காமல் சிறப்பு தரிசனம் செய்தனர்.

    சபரிமலையில் வருகிற 26-ந்தேதி மண்டல பூஜை நடைபெற உள்ளது. மண்டல பூஜை நெருங்குவதால் பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரிக்கும். இதனால் சபரிமலையில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×