search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூடலூர் அருகே 1 கோடி பழைய ரூபாய் நோட்டுக்கள் கடத்தல்
    X

    கூடலூர் அருகே 1 கோடி பழைய ரூபாய் நோட்டுக்கள் கடத்தல்

    கூடலூர் அருகே 1 கோடி பழைய ரூபாய் நோட்டுக்கள் கடத்தியது தொடர்பாக போலீசார் 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கொழிஞ்சாம்பாறை:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ள கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் மானந்தவாடி டி.எஸ்.பி. தேவசி நேற்று புல்பள்ளி என்ற இடத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது மலப்புரத்தில் இருந்து ஒரு கார் வந்தது. அதில் 4 பேர் இருந்தனர்.

    காரை நிறுத்தி அவர்களிடம் விசாரணை நடத்தியபோது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினர். சந்தேகம் அடைந்த போலீசார் காரை சோதனை செய்தனர்.

    காரின் ரகசிய அறையில் மதிப்பு இழப்பு செய்யப்பட்ட பழைய 1000, 500 ரூபாய் நோட்டுக்கள் ரூ.1 கோடி இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் இந்த பணம் பையனூர் என்ற இடத்தில் இருந்து வயநாட்டுக்கு கடத்தி வந்ததாகவும் அங்குள்ள ஒருவரிடம் ரூ.1 கோடி செல்லாத ரூபாய் நோட்டுக்களை கொடுத்தால் புதிய நோட்டுக்கள் ரூ.25 லட்சம் தருவார் என்று கூறினர்.

    பழைய நோட்டுக்கள் எங்கும் மாற்ற இயலாத நிலையில் அதிக அளவில் அடிக்கடி கடத்தப்படுவது கேரள போலீசாரிடையே பெரும் குழப்பதை ஏற்படுத்தியுள்ளது. சில முக்கிய விசாரணை இருப்பதால் கைது செய்யப்பட்டவர்களின் பெயர் விபரங்கள் கூற முடியாது என்று டி.எஸ்.பி. தேவசி தெரிவித்தார். 4 பேரையும் போலீசார் மானந்தவாடி கோர்ட்டில் ஒப்படைத்தனர்.

    இதேபோன்று பெருந்தல்மன்னா பஸ் நிலையம் அருகே 2 வாலிபர்கள் சந்தேகப்படும்படி இருந்தனர். அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அவர்களிடம் கணக்கில் வராத ரூ.70 லட்சம் புதிய நோட்டுக்கள் இருந்தன. கருப்பு பணத்தை கடத்தி வந்த சபீர் (37), நிசாது (44) ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×